பாகிஸ்தான் ஜிடிபி vs தமிழக ஜிடிபி! எது பெரிசு? "இந்த" மாநிலத்தை விடவும் பாக். ஜிடிபி கம்மி தெரியுமா
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும் போது பாகிஸ்தான் நமது ஒரு இந்திய மாநிலத்தை விட பலவீனமாகவே இருக்கிறது. தமிழ்நாடு பொருளாதாரம் கூட பாகிஸ்தானுக்கு இணையாகவே இருக்கிறது.
கடந்த மாதம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தியா நேற்று ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. நேற்று 1.45 am அளவில் நடந்த இந்தத் தாக்குதலை வெறும் 25 நிமிடங்களில் இந்தியா முடித்துவிட்டது.

தீவிரவாத இலக்குகள்
பாகிஸ்தானில் பல முக்கியமான தீவிரவாத இலக்குகள் இதில் தகர்க்கப்பட்டது. 70 முதல் 80 தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. தீவிரவாதிகளை அழித்த இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் கூறி வருகிறது. மேலும், இதற்கு ராணுவத்திற்கு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு!
ஆனால், போர் ஏற்பட்டால் அதை பாகிஸ்தானால் அவ்வளவு ஈஸியாக எல்லாம் சமாளிக்க முடியாது. போர் வெடித்தால் பாகிஸ்தான் சில நாட்களில் தள்ளாடிப் போய்விடும். ஏனென்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் அவ்வளவு மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் இந்தியாவில் ஒரு மாநிலத்தின் ஜிடிபியை விடக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா.. ஆம் அதுதான் உண்மை. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபி மகாராஷ்டிர ஜிடிபியை விட குறைவு.! கிட்டதட்ட தமிழ்நாட்டிற்கு இணையானது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச நிதியம்
நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தான் ஜிடிபி வளர்ச்சி 2.6% மட்டுமே வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2024ல் பாகிஸ்தான் ஜிடிபி 374 மில்லியன் டாலர்களாக இருப்பதாக சிஎன்பிசி குறிப்பிட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.31.9 லட்சம் கோடி மட்டுமே.. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது தனது பட்ஜெட்டில் கணிசமான தொகையை ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த செலவுகளையே அதிகம் செய்கிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் ராணுவ செலவும் கூட மிகக் குறைவாகவே இருக்கிறது.
மகாராஷ்டிராவை விட குறைவு
இந்தியப் பொருளாதாரத்துடன் பாகிஸ்தான் ஜிடிபியை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிக மிகக் குறைவாகவே இருக்கும். ஒட்டுமொத்த நாட்டை விடுங்கள்.. நமது நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜிடிபியை விடக் கூட பாகிஸ்தானின் ஜிடிபி குறைவு தான். மகாராஷ்டிராவின் ஜிடிபி 42.67 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபியான 31.9 லட்சம் கோடி ரூபாயை விட கிட்டதட்ட 11 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.
தமிழ்நாடு சைஸ் தான்
அவ்வளவு ஏன் நம்ம தமிழ்நாடு ஜிடிபியும் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஜிடிபியும் கூட கிட்டதட்ட சமமாகவே இருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ரூ.31.55 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுவதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. இன்னும் சிலர் தமிழ்நாட்டின் ஜிடிபி 25 லட்சம் கோடி முதல் 30 லட்சம் கோடியாக இருக்கலாம் என மதிப்பிடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது பாகிஸ்தானின் மொத்த ஜிடிபியை விட கொஞ்சம் மட்டுமே குறைவாகும் என்று தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் முதலீடு செய்யவே முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே நேற்று பாகிஸ்தான் பங்குச்சந்தையில் மிகப் பெரிய அடி விழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications