சென்னை: ஆயிரம் ரூபாயை தாண்டியது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
(இலங்கை, இந்திய செய்தித்தாள்கள், இணைய தளங்களில் இன்று (மே 7) வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரித்து ரூ.1000-ஐ தாண்டியுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அவசரநிலை பிரகடனம் தீர்வாகாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.
வேலைநிறுத்தம் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை கோரியுள்ளது.
- ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித்: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு
- ஸ்டாலினின் ஓராண்டு திமுக ஆட்சி சாதனையா, சாதாரணமா?
- ஆளுநர் ரவியின் சர்ச்சைப் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகள் கொதிப்பது ஏன்?
காலி முகத்திடல் போராட்டம்: காவல்துறை முறைப்பாடு வரும் 10ம் தேதி விசாரணை
கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதாகக் கூறி காவல்துறை முன் வைத்துள்ள முறைப்பாடொன்று வரும் மே 10ம் தேதி கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரிக்கப்படவுள்ளதாக 'வீரசேகரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று (மே 6) இந்த முறைப்பாட்டினை பரிசீலிக்க கொழும்பு மேலதிக நீதிவான்கலான ஹர்ஷ கெக்குனவல மற்றும் ஷிலினி பெரேரா ஆகியோர் விரும்பாத நிலையில், நீதிவான் ஷிலினி பெரேராவால் வரும் மே 10ம் தேதி இந்த விவகாரம் பிரதான நீதிவான் முன்னிலையில் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
'சட்டப்பூர்வ வயதை எட்டுவதற்கு முன்பே 25 சதவீதம் பெண்களுக்கு திருமணம்'
சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே பெண்களில் 25 சதவீதம் பேருக்கு திருமணம் நடைபெற்றிருப்பது தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு (என்எஃப்ஹெச்எஸ்) அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.
அதுபோல, 21 முதல் 29 வயதுவரையுடைய 15 சதவீதம் ஆண்களுக்கு சட்டப்பூர்வமாக குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயது 18 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 21 வயது என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, இரு தரப்பினருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தச் சூழலில், சட்டப்படியான வயதை அடைவதற்கு முன்னரே திருமணங்கள் நடைபெறுவது தொடா்பாக 2019 முதல் 2021 வரை என்எஃப்ஹெச்எஸ் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில்,
சட்டப்பூர்வமாக குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் மாநிலங்களில் 42 சவீதத்துடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது.
அதுபோல, குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம் நடைபெறும் மாநிலங்களில் 25 சதவீதத்துடன் பிகாா் முதலிடத்தில் உள்ளது.
ஆம்புலன்ஸூக்கு தர பணம் இல்லாததால், மகள் உடலை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற தந்தை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகளின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸூக்கு தர பணம் இல்லாததால், இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த அக்ஷயா (2) எனும் சிறுமி, வீட்டுக்கு அருகே மழைநீர் அதிகமாக இருந்த குழியில் தவறி விழுந்தார். பின்னர் குழந்தையை மீட்டு நாயுடுபேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சிறுமியின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுத்துவிட்டார். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 10 ஆயிரத்துக்கு மேல் பணம் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லாததால், வேறு வழியின்றி குழந்தையின் உடலை உறவினரின் பைக்கில் வைத்துக் கொண்டு வீடு போய் சேர்ந்தனர். ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் நடந்தது. அதன் பின்னர் விசாரணை குழு அமைத்து அதிகம் பணம் கேட்க கூடாது என அனைத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=oqKv7KY7z5E
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications