மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. ட்ரோன் மூலம் வெடி குண்டு வீசி தாக்குதல்! அச்சத்தில் மக்கள்!
இம்பால்: மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதற்றமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வன்முறைகள் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காங்போக்பியில் உள்ள நகுஜாங் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸ் கூறுகையில், "குக்கி சமூகத்தை சேர்ந்த, ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். தாக்குதலில் ஸ்னைப்பர்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இதை உறுதி செய்திருக்கின்றனர்.

ட்ரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். ட்ரோன் தாக்குதல்கள், இப்பகுதி மக்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளனர்.
முன்னதாக ஞாயிறன்று மாலை சுராசந்த்பூர் மாவட்டத்தின் பெனியல் கிராமத்தில் உள்ள மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மைக் கேல் லாம்ஜாதங்கின் வீட்டையும், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களையும் 20 பேர் கொண்ட மர்மக் கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
பின்னணி: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 16 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 220க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட பழங்குடி மக்கள் 47 சதவிகிதமும், மெய்தி உள்ளிட்ட பழங்குடியினர் அல்லாத மக்கள் 53 சதவிகிதமும் இருக்கின்றனர். இங்கு பழங்குடி மக்களுக்கு என சில சிறப்புரிமைகள் இருக்கிறது. அதாவது இம்மாநிலத்தில நிலங்களை வாங்க இம்மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. எனவே 53 சதவிகிதமாக உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
தொடக்கப்புள்ளி: சமீபத்திய மணிப்பூர் சட்டமன்ற தேர்தலின்போது, மெய்தி மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. எதிர்பார்த்தபடி அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர்.
நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டிலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது. இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி.












Click it and Unblock the Notifications