ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து குஜராத்திலும் அத்துமீறல்.. உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கவி முக்கிய தகவல்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே நிலவி வந்த சண்டை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஏராளமான டிரோன்கள் பறப்பதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது முழு மின்தடை செயல்படுத்தப்படும் என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கவி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தாக்குதல் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் தரப்பில் கடந்த 2 நாட்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்திய ராணுவமும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. போர் பதற்றம் இரு நாட்டுகளிடையேயும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாலை இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவு எழுந்து வருகிறது. போர் முடிவுக்கு வந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லையில் உள்ள கதுவா, சம்பா, சுந்தர்பானி, உதம்பூர், அக்னூர், நவ்சேரா உள்பட 11 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல, குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் டிரோன்கள் பல பறப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்ஸ் சங்கவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "கட்ச் மாவட்டத்தில் பல ட்ரோன்கள் காணப்படுகின்றன. தற்போது முழுமையான மின் தடை செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். பீதியடைய வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications