மேற்கு வங்க கலவரம்.. தேர்தல் ஆணையம்தான் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பு.. ஆளுநருக்கு மமதா சாட்டையடி பதில்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாட்டையடி பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக இன்று மமதா பானர்ஜி பதவி ஏற்றார். 213 இடங்களில் வென்று அறுதிபெரும்பான்மையோடு மமதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அங்கு கடந்த 3 நாட்களாக பல இடங்களில் கலவரங்கள் நடந்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் பாஜக அலுவலகங்கள், கட்சி ஆபீஸ்கள் தாக்கப்பட்டு வருகின்றன. சில பாஜக வேட்பாளர்களும் கூட தாக்கப்பட்டு வருகின்றனர்.

தாக்குதல்
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த தாக்குதல்களை கட்டவிழுத்துவிட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் பாஜகதான் கலவரத்தை தூண்டி விடுகிறது. கலவரத்திற்கு பாஜகதான் காரணம் என்று திரிணாமுல் தரப்பு புகார் வைக்கிறது. இதுவரை நடந்த பல்வேறு கலவரங்கள் மற்றும் மோதல்களில் 12 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

புகார்
மேற்கு வங்கத்தில் நடக்கும் இந்த கலவரங்கள் குறித்து பிரதமர் மோடியே நேரடியாக ஆளுநர் ஜெகதீப் தங்கரிடம் தொலைபேசியில் பேசி, விவரங்களை கேட்டறிந்தார். இதனால் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்பின் ஆளுநர் ஜெகதீப் தங்கர் டிவிட்டரில், மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்க முடியாது. இதை பற்றி கண்டிப்பாக விசாரிப்போம்.

கடந்து செல்ல மாட்டோம்
இந்த கலவரங்களை நாங்கள் கடந்து சென்றுவிட மாட்டோம். உரிய முறையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். இந்த நிலையில் இன்று மேற்கு வங்க முதல்வராக மமதா பானர்ஜி பதவி ஏற்ற பின், மீண்டும் அதே அறிவுரையை மமதா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் வழங்கினார். அதில், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை.

சட்ட ஒழுங்கு
சட்டம் ஒழுங்கை உடனே காப்பாற்ற வேண்டும். கலவரங்களை உடனே மமதா பானர்ஜி கட்டுப்படுத்த வேண்டும் என்று என முதல்வராக பதவியேற்ற நிலையில் மமதாவுக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவுரை வழங்கினார். இதை கேட்டு கொதித்து போன மமதா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தங்கரிடம், கொரோனாவை கட்டுப்படுத்துவதான் என்னுடைய முதல் பணி. கடந்த சில நாட்களாக நடந்த கலவரங்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது.

ஆட்சி
மாநில நிர்வாகம் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. மாநிலத்தின் சட்ட ஒழுங்கிற்கு தேர்தல் ஆணையம்தான் இதுவரை பொறுப்பு. போலீஸ் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.நான் தேர்தல் முடிந்து இப்போதுதான் முதல்வராக பொறுப்பேற்றுள்ளேன்.

கட்டுப்பாடு
சட்டத்தை யார் கையில் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க மாட்டேன், சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மமதா பானர்ஜி உடனடியாக பதிலடி கொடுத்தார். மேற்கு வங்கத்தில் நடந்த கலவரங்களை அடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி வரலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது முதல்வராக மமதா பானர்ஜி சிக்கல் இன்றி பதவி ஏற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications