ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது.. காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் பரபர.. இவிஎம் குறித்து புகார்
சண்டிகர்: ஹரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்க உள்ளது. தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ், ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "ஹரியானா தேர்தல் முடிவுக்கான தீர்ப்பு மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறினார். ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. கடந்த 2 முறை ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வென்றது.

தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானாவில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: -
ஹரியானா தேர்தல் முடிவுக்கான தீர்ப்பு மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது. ஹரியானாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்து இருக்கின்றன. தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டு இருக்கிறது. ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது.
ஹரியானா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது. ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் ஆகிய மூன்று மாவட்டங்களில் எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிலவற்றில் பேட்டரி சதவிகிதம் 99 ஆக உள்ளது. இந்த இயந்திரங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
60-70 சதவிகத பேட்டரி பவர் உள்ள இயந்திரங்ளில் எங்கள் வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பல முக்கியமான புகார்கள் வந்துள்ளன. ஹரியானாவில் உள்ள எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications