மதம் பிடித்த யானைக்கு மயக்க ஊசி – மருந்து வேலை செய்யாமல் டாக்டரைக் கொன்ற பரிதாபம்
கொல்லம்: கேரளாவில் மயக்க ஊசி செலுத்திய டாக்டரை யானை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கருணாகபள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் . பத்தனம்திட்டா மாவட்டம் மல்லபள்ளி மண்டல கால்நடை சுகாதார மைய அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வந்தார்.
இவர் ஆழப்புலா, பத்தனம்திட்டா மற்றும் கோட்டையம் ஆகிய மாவட்டங்களில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மல்லபள்ளி அருகே உள்ள கொட்டாங்கல் பகுதியை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான கங்காபிரசாத் என்ற யானையை, அதன் பாகன்கள் அங்குள்ள சிவன் கோயில் அருகே உள்ள ஆற்றில் குளிப்பாட்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென யானைக்கு மதம்பிடித்து ஓட தொடங்கியது.
இதுகுறித்து உடனடியாக டாக்டர் கோபகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் விரைந்து சென்றார். இதற்கிடையில், அந்த யானை சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு பிளிறியபடி ஓடியது. சம்பவ இடத்திற்கு சென்ற கோபகுமார் யானையை நோக்கி துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தினார்.
ஆனால் அந்த யானைக்கு மயக்கம் ஏற்படவில்லை. இதையடுத்து, அவர் யானை அருகே சென்று மயக்க ஊசியை செலுத்தினார். திடீரென பின்னால் திரும்பிய யானை டாக்டர் கோபகுமாரை விரட்டியது. அவர் பயந்து ஓடிய போது தடுமாறி கீழே விழுந்தார். அருகில் வந்த யானை தந்தத்தால் கோபகுமார் வயிற்றில் பலமாக குத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் யானை மீது சரமாரியாக கற்களை வீசினர்.
இதையடுத்து மீண்டும் ஆவேசமடைந்த யானை இடது காலால் டாக்டரை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு போராடினார். இதற்கிடையில் யானை மயக்கமடைந்தது. இதையடுத்து அப்பகுதியினர் ஓடிச் சென்று டாக்டரை மீட்டு திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். உதவியாளர் இல்லாமல் கோபகுமார் தனியாக சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு, பிந்து லெட்சுமி என்ற மனைவியும், கோபிகா என்ற மகளும் உள்ளனர். டாக்டர் கோபகுமார் மரணத்துக்கு விவசாய மற்றும் கால்நடை துறை அமைச்சர் மோகனன் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications