பாகிஸ்தானுக்கு உளவு.. காங்., மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் அதிரடி கைது.. யார் இந்த ஷாகுர் கான்?
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளரும், அரசு ஊழியருமான ஷாகுர் கானை உளவுத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான ஷாகுர் கான் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியது உள்பட அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் 9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது. நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதன்பிறகு பாகிஸ்தான் நம்மிடம் பணிந்து சண்டை நிறுத்தம் செய்ய கோரிய பிறகு மோதல் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே நம் நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவுப்பார்த்த நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்து நம் நாடு பற்றிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியவர்களை தேடி தேடி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 10க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதோடு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஷாலே முகமதுவும், ஷாகுர் கானும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இதனால் தான் ஷாலே முகமது, அவரை உதவியாளராக சேர்த்ததும் தெரியவந்துள்ளது.
ஷாகுர் கான் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வந்ததோடு, பாகிஸ்தானை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் சிஐடி மற்றும் உளவுத்துறையின் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்கள் இணைந்து அவரை கைது செய்துள்ளனர். சாகுர் கானிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஷாகுர் கான் மங்கலியா என்பவர் காங்கிரஸ் மாஜி அமைச்சரிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் ஜெய்சல்மார் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது.
இவர் மீது உளவுத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தது. அப்போது அவர் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ளவர்கள் மூலமாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரது செல்போனில் இருந்து பாகிஸ்தானின் செல்போன் எண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும் அவர் 6 முதல் 7 முறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக எஸ்பி சுதீர் சவுத்ரி கூறுகையில், ‛‛சந்தேகத்துக்கு இடமான செயல்பாடு மற்றும் மேலிட உத்தரவு ஆகியவற்றால் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications