நியமன எம்.எல்.ஏ.க்கள்....தலையிட்டால் உச்சநீதிமன்றம் போவோம்.. ஆளுநருக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய அரசுதான் 5 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கும் அதிகாரம் கொண்டது; நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலையிடவும் கூடாது; ஆளுநரே நியமன எம்,.எல்.ஏக்களை நியமித்தால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்வோம் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவை சேர்ந்த 5 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கக் கூடும் என செய்திகள் வெளியான நிலையில் பரூக் அப்துல்லா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதலாவது அரசாக இந்த கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜகவைச் சேர்ந்த 5 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கக் கூடும்; அவருக்கு அதிகாரம் இருக்கிறது என பாஜக தரப்பு கூறி வருகிறது. இதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குதான் நியமன எம்.எல்.ஏக்களை பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமையில் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது. அரசு தரப்பு பரிந்துரைக்கும் நியமன எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் ஏற்கத்தான் வேண்டும். இதனை மீறி துணை நிலை ஆளுநரே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தால் அது தவறான முன்னுதாரணமாகும். அப்படி ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் முறையீடு செய்வோம் என்றார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்த போதும் ஆளுநரே நியமன எம்.எல்.ஏக்களாக பாஜகவினரை நியமித்தது பெரும் சர்ச்சையானது. 2021-ம் ஆண்டு நியமன எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றதால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு கவிழ்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications