ஒரே நபர் பல பான் கார்டு...11.44 லட்சம் பான் கார்டுகள் ரத்து - மத்திய அரசு தகவல்!
ஒரு நபரே பல பான்கார்டுகளை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு இது வரை 11.44 லட்சம் பான் அட்டைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : வரி ஏய்ப்பு செய்ய ஒரு நபரே பல பான் அட்டைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 27ம் தேதி வரை 11.44 லட்சம் பான் அட்டைகள் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் ராஜ்யசபாவில் எழுத்து மூலம் ஒரு கடிதத்தை தாக்கல் செய்துள்ளார். அதில்

ஜூலை 27 ம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பான் அட்டைகள் வரி ஏய்ப்பு மற்றும் தனி நபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் பணப்பரிமாற்றத்தை அரசு தெரிந்து கொள்ள உதவுவதற்காக வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு நிரந்தர வைப்பு கணக்கு எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. இந்த விதி மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் எண்ணை கட்டாயம் அதனுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு நபரே பல பான் அட்டைகளை பயன்படுத்துவதை தவிர்க்க முடியும் என்று அரசு நினைக்கிறது.
இதற்கான கால அவகாசமாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பான் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே நபருக்கு பல பான் எண்கள் வழங்கப்பட்டுள்ளது போன்ற விதிமீறல்கள் கண்டறிப்பட்டதன் அடிப்படையில் அவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கங்குவார் கூறியுள்ளார். மேலும் இதுவரை 1566 போலி பான் கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவைகள் போலி பெயர் மற்றும் அடையாள சான்றுகள் கொடுத்து பெறப்பட்டுள்ளது அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த போலி பான் எண்கள் 2004 முதல் 2007 வரை வழங்கப்பட்டவை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
