என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன "கிங் மேக்கர்" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக
விஜயவாடா: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் கடந்த இரு தேர்தல்களைப் போல எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. அதாவது நாட்டில் உள்ள 543 தொகுதிகளில் 272ஐ ஒரு கட்சி வென்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆனால், இந்த மேஜிக் நம்பர் எந்தவொரு கட்சிக்கும் கிடைக்கவில்லை.
சந்திரபாபு நாயுடு: பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும் இப்போது ஆட்சியை அமைக்கக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நம்பர் கேமில் தான் சந்திரபாபு நாயுடு முக்கியமாக உருவெடுத்துள்ளார். ஏனென்றால் அவரது தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளனர். என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்து சந்திரபாபு நாயுடு பெரிய கட்சியாக இருக்கும் நிலையில், அவரது முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அவர் என்டிஏ கூட்டணியிலேயே தொடர்வாரா அல்லது இந்தியா கூட்டணி பக்கம் வருவாரா என்பதில் குழப்பம் இருந்தது. இரு தரப்பும் அவரை தங்கள் பக்கம் கூட்டி வர முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: இது தொடர்பாக விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "இன்று டெல்லி செல்கிறேன். தேர்தல் முடிந்ததும், இது எனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு. வாக்காளர்களின் எங்களுக்குக் கொடுத்த ஆதரவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. இது ஒரு வரலாற்றுத் தேர்தல். மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து மக்கள் பெருந்திரளாக வந்து வாக்களித்துள்ளனர். அதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.
ஆந்திர மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக ஒரு கூட்டணி அமைத்தோம்.. இந்தக் கூட்டணிக்கு 55.38% வாக்குகள் கிடைத்துள்ளன.. தெலுங்கு தேசம் கட்சிக்கு மட்டும் 45% வாக்குகள் கிடைத்துள்ளன.
எனது வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலை நாம் பார்த்தது இல்லை.. மக்களுக்குச் சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு ஆதரவு: தொடர்ந்து பேசிய அவர், "நான் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறேன்.. பாஜகவுக்குத் தனது ஆதரவு இருக்கும்.. இப்போது என்டிஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே செல்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
எத்தனை சீட்: ஆந்திராவில் மொத்தம் 25 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 21 தொகுதிகளில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி வென்றுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் மட்டும் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. இது தவிர பாஜக 2 தொகுதிகளிலும் ஜனசேனா 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளன..












Click it and Unblock the Notifications