இதுவே இப்பதான் நடக்குதா? நாகலாந்தில் முதல்முறை எம்எல்ஏவாகி பெண் வரலாற்று சாதனை.. யார் இந்த ஹெகானி?
நாகலாந்து மாநிலமாகி 60 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முதல் முறையாக ஒரு பெண் எம்.எல்.ஏவாகி இருக்கிறார்.
கோஹிமா: நாகலாந்து மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிபிபி கட்சியின் வேட்பாளர் ஹெகானி ஜகாலு வெற்றி பெற்று நாகலாந்து மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இந்த வரலாற்று பெருமையை பெற்ற ஹெகானிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன. நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிகாலம் முடிவவதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

என்டிபிபி முன்னிலை
இந்த தேர்தலில் மீண்டும் பாஜக - என்டிபிபி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு உள்ளன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி என்டிபிபி 11 இடங்களில் முன்னிலையும் 13 இடங்களில் வெற்றியும் பெற்று இருக்கிறது.

முதல் பெண் நாகலாந்து எம்.எல்.ஏ.
இவ்வாறு வெற்றிபெற்ற என்டிபிபி வேட்பாளர்களில் ஒருவர்தான் ஹெகானி ஜகாலு. திமாபூர் 3 தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் மூலம் நாகலாந்து மாநில வரலாற்றிலேயே முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்ஜேபி கட்சி வேட்பாளரை விட 1,536 வாக்குகள் அதிகம் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி இருக்கிறார்.

யார் இந்த ஹெகானி ஜகாலு?
அமெரிக்காவில் சட்டம் பயின்ற் ஹெகானி ஜகாலு தொழிலதிபராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். 48 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் யூத்நெட் என்ற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக சிறுவர்கள், இளைஞர்களுக்கு கல்வி கற்று வந்து இருக்கிறார். இதனால் இவர் மீது அப்பகுதி மக்கள் மிகுந்து மரியாதை வைத்துள்ளனர்.

வரலாற்றில் இடம்பிடித்த ஹெகானி
இந்த நிலையில் என்டிடிபி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கும் இவர் நாகலாந்து மாநில வரலாற்றில் தன்னுடைய பெயரை ஆழமாக முத்திரை பதித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நாகலாந்து சமூக ஆணாதிக்கம் நிறைந்ததாக உள்ளது. ஆனால் மக்கள் மனநிலை மாறி வருகிறது.

ஆணாதிக்க மாநிலம்
என்டிடிபி கட்சி எனக்கும் எனது மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிடும் எனது சக வேட்பாளரான சல்ஹுதானோ குரூசுக்கு வாய்ப்பு அளித்து நேரத்தையும் உழைப்பையும் செலவழித்தது இதற்கு ஒரு உதாரணம்." என்றார். இந்தியாவில் பெண் பிரதமர், பெண் குடியரசுத் தலைவர், பெண் முதலமைச்சர்கள், பெண் அமைச்சர்கள் பலர் வந்துவிட்ட சூழலில் நாகலாந்து மாநிலத்தில் ஒரு பெண் முதல்முறையாக இன்றுதான் சட்டமன்ற உறுப்பினராகிறார் என்பதே வியப்பை தருகிறது.

2018 தேர்தல்
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட அவான் கோன்யாக் அதில் வெற்றிபெற்று மாநிலத்தில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் தோல்வியடைந்த நிலையில் அந்த பெருமையை தற்போது பெற்றுள்ளார் ஹெகானி.












Click it and Unblock the Notifications