சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழ்நாட்டின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! திருப்பத்தூரில் சோகம்
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி, தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவில் என்ஜினியரான ராஜேஷ்குமார் 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த ராஜேஷ்குமார் சொந்த ஊர் திரும்பும் போது, அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து, படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) என்பவர் கடந்த 15 ஆண்டு காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் வசித்து வந்த அவர்கள் திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதில் காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களது உடல்களை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களையும் எடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications