"ரூ.80 லட்சம், கழுதை விமானம்.." இந்தியா டூ அமெரிக்கா சட்டவிரோதமாக.. குஜராத்தில் என்ன தான் நடந்தது
காந்திநகர்: கடந்த வாரம் இந்தியர்களுடன் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டில் பிடிக்கப்பட்ட சம்பவம் பகீர் கிளப்பி இருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் சர்வதேச அளவில் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு சம்பவம் நடந்தது. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு விமானம் சென்று கொண்டு இருந்தது.

அந்த விமானம் எரிபொருள் நிரப்ப பிரான்ஸின் வத்ரி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் ஆள் கடத்தல் நடந்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனச் சொல்லப்பட்டது.
கழுதை விமானம்: அதில் இருந்த பயணிகளிடம் சுமார் 4 நாட்கள் வரை விசாரணை நடத்தினர். அது சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் என்பது தெரிய வந்தது. பொதுவாக இதுபோன்ற விமானத்தைத் தான் கழுதை விமானம் என்பார்கள். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு அந்த விமானம் கிளம்ப அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து சுமார் 276 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் மும்பைக்கு வந்து இறங்கியது. விமானத்தில் இருந்த 27 பேர் பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாகத் தங்க அடைக்கலம் கோரியதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்தவர்கள்: இந்த விமானத்தில் இருந்தவர்களில் 60க்கும் மேற்பட்டோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இம்மிகிரேஷன் ஏஜெண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் முதல் ரூ, 80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அந்த இம்மிகிரேஷன் ஏஜெண்டுகள் தான் லத்தீன் அமெரிக்க நாடான நிகரகுவாவில் இருந்து இவர்களைச் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல இருந்தனர்.
இது குறித்து குஜராத் அதிகாரிகள் கூறுகையில், "அவர்களில் சில மைனர்கள் உட்பட 66 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 66 பேரும் இப்போது ஏற்கனவே தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மெஹ்சானா, அகமதாபாத், காந்திநகர் மற்றும் ஆனந்த் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
80 லட்ச ரூபாய்: அவர்களில் 55 பேரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலோர் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளனர்.. அவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவ அங்குள்ள உள்ளூர் இம்மிகிரேஷன் ஏஜெண்டுகள் ரூ. 60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கொடுக்க ஒப்புக்கொண்டனர். துபாய் வழியாக நிகரகுவாவுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதே அவர்கள் திட்டமாக இருந்தது.
55 பேரும் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு பணத்தை வழங்கினால் போதும் எனச் சொல்லியுள்ளனர். தங்கள் ஆட்கள் நிகரகுவாவில் இருந்து அமெரிக்க எல்லைக்கு அழைத்துச் செல்வதாகவும், பின்னர் எல்லையைக் கடக்க உதவுவதாகவும் ஏஜெண்டுகள் உறுதி அளித்துள்ளனர். அந்த ஏஜெண்டுகள் தான் இவர்களின் டிக்கெட், விசா என அனைத்தையும் புக் செய்துள்ளனர். மேலும், எதிர்பாராத விதமாக எதாவது நடந்தால் அதைச் சமாளிக்கவும் 1,000 முதல் 3,000 டாலர்களை கொடுத்துள்ளனர்" என்றார்.
திட்டம் என்ன: அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவே பிளான். இவர்களுக்கு உதவுவதாகச் சொன்ன அந்த 15 ஏஜெண்டுகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களைக் குஜராத் போலீசார் சேகரித்துள்ளனர். அதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து குஜராத் சிஐடி முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "ஏஜெண்டுகள் திட்டப்படி இந்த 66 பயணிகளும் டிசம்பர் 10 முதல் 20 வரை அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லியில் இருந்து துபாய் சென்றடைந்தனர்.
ஏஜெண்டுகள் சொன்னபடி அவர்கள் புஜைரா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நிகரகுவா செல்லும் விமானத்தில் ஏறினர். அந்த ஏஜெண்டுகள் துபாயிலிருந்து நிகரகுவாவின் விசாவை எப்படிப் பெற்றனர்.. தனியார் விமானத்தை எப்படி முன்பதிவு செய்தனர் என்பது குறித்து விசாரிப்போம்" என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications