பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு.. மண்டியிட வைத்து ”பாரத் மாதா கி ஜே” முழக்கம்.. வேகமாக பரவும் வீடியோ!
பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்த நபரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கும்பலின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கோவா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த நபரை, மண்டியிட வைத்து ஐ லவ் இந்தியா என்று கும்பல் ஒன்று கூற வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் பாரத் மாதா கி ஜே என்றும் கூற வைத்து அந்த நபரை கும்பல் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டாவுத் அஹூண்ட்சடா. இவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் டாவுத் அஹூண்ட்சடா கோவா மாநிலத்தில் எடுத்த வீடியோ தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் பதிவேற்றிய வீடியோ
யூடியூபர் டாவுத் அஹூண்ட்சடா கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி கோவாவின் கலங்ஹூடி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியை கடைத் தெருவில் உள்ள ஒரு கடையில் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு
அந்த கடைக்கு சென்ற யூடியூபர் டாவுத், அங்கிருந்தவர்களை பார்த்து நீங்கள் நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும் என்று ஆட்டத்தை பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்தக் கடை உரிமையாளர், தான் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு என்று பதில் அளித்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்று அந்த யூடியூபர் பதில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த கடையின் உரிமையாளர், இது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி அதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

கடை உரிமையாளரை பிடித்த கும்பல்
கோவாவில் உள்ள கடைத்தெருவில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிப்பதாக கூறி யூடியூபர் டவுக் அஹூண்ட்சடா, அதன் முழு வீடியோவையும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அப்பகுதி மக்களின் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. இந்நிலையில், அந்த கடையின் உரிமையாளரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று சிறை பிடித்து, அவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டியுள்ளனர்.

மண்டியிட வைத்த கும்பல்
அதுமட்டுமல்லாமல், அத்துடன் கடை உரிமையாளரை மண்டியிட வைத்து ஐ லவ் இந்தியா என்று கூறிக் கொண்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். காதுகளில் கை வைத்து மண்டியிட்டு அந்த உரிமையாளர் மன்னிப்பு கேட்கவே, அவரை குழுமி இருந்த நபர்கள் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவரையும் பாரத் மாதா கி ஜே கோஷம் எழுப்ப வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications