பெண்ணுடன் நெருக்கம்.. அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் பற்றி அவதூறு.. காங்கிரஸ் தலைவர் கைது
அகமதாபாத்: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ள மோதித் பாண்டே பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக கூறி ஆபாசமான போட்டோக்களை வலைதளங்களில் பதிவிட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020 பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது.

ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக கோவில் அமைய உள்ளது. கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
தற்போது கோவிலின் தரைதளம் என்பது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கோவில் கும்பாபிேஷகம் என்பது 2024 ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் பணியாற்ற உள்ள தலைமை அர்ச்சகர், அர்ச்சகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமர் கோவிலுக்கு தலைமை அர்ச்சகராக மோகித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் மோகித் பாண்டே பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக போட்டோ ஒன்று இணையதளத்தில் பரவியது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஹிதேந்திர பிதாடியா இந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவின் தலைவராக உள்ள இவர் தனது வலைதள பக்கத்தில் நெற்றி நிறைய குங்குமம், சந்தனம் பூசியபடி இருக்கும் ஆண் ஒருவர் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் 2 போட்டோக்களை பதிவிட்டு இருந்தார். அதோடு, ‛‛அயோத்தி ராமர் கோவிலின் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரா இவர்?" என கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் உண்மையில் அந்த போட்டோ மற்றும் வீடியோவில் இருப்பது தலைமை அர்ச்சகராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகித் பாண்டே கிடையாது.

இதனால் ஹிதேந்திர பிதாடியா வேண்டும் என்றே தனிநபரை அசிங்கப்படுத்தவும், அயோத்தி ராமர் கோவில் பற்றி அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டம் 469, 509, ஐபிசி 295 ஏ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிதேந்திர பிதாடியாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications