ராமர் கோவிலை எப்படி புறக்கணிக்கலாம்? அதிருப்தியில் காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. யார் இவர்?
காந்திநகர்: ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்காமல் காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிக்க உள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த அந்த கட்சியின் எம்எல்ஏ சிஜே சாவ்தா திடீரென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாள் பூஜைகள், ஹோமங்கள், சடங்குகள் கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் நேற்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்டது. 5 வயது நிரம்பிய ராமர் சிலையானது பூஜைகளுக்கு பிறகு கோவிலில் நிறுவப்பட்டது. வரும் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இந்த சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளார்.
இந்த விழாவில் சுமார் 3 ஆயிரத்துக்குமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கிடையே தான் விழாவில் பங்கேற்கும்படி கோவில் அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். கோவில் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் தேர்தல் அரசியலுக்காக பாஜக அவசரகதியில் கோவிலில் கும்பாபிஷேகம் செய்கிறது என குற்றம்சாட்டி 3 பேரும் விழாவை புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கும் கட்சியின் முடிவால் அதிருப்தியடைந்து காங்கிரஸ் எம்எல்ஏ சிஜே சாவ்தா ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலம் விஜாப்பூர் தொகுதி எம்எல்ஏவான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்து வழங்கினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். 25 ஆண்டுகளாக காங்கிரசில் பணியாற்றிய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் ராமர் கோவில் விவகாரம் தான். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மகிழ்ச்சி அலையின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் வேறு விதமான அணுகுமுறையை எடுத்துள்ளது. இதனால் வருந்தமடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்'' என்றார்.
தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள சிஜே சாவ்தா குஜராத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2002ல் காந்தி நகர், 2012 ஆகிய சட்டசபை தேர்தல்களில் காந்தி நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாகவும் செயல்பட்டார். அதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலில் விஜாப்பூரில் போட்டியிட்டு வென்றார்.
குஜராத்தை பொறுத்தமட்டில் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 156 தொகுதிகளில் வென்று அமோக வெற்றி பெற்றதோடு குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்தது. மாறாக காங்கிரஸ் வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த காம்பட் மற்றும் சிராக் படேல் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது சிஜே சாவ்தாவும் எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்துள்ளார். இதன்மூலம் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 14 என குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications