61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்.. வெற்றிக்கோட்டை எட்டிய ஹர்திக் படேல்! படுகுழியில் விழுந்த காங்கிரஸ்
அகமதாபாத் : குஜராத்தில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்து சீட் பெற்ற நட்சத்திர வேட்பாளர் ஹர்திக் படேல் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் முந்தி, தற்போது 61,000 வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றிக்கோட்டை நெருங்கி வருகிறார்.
அதேபோல, காங்கிரஸில் இருந்த அல்பேஸ் தாக்கூர் பாஜகவில் சேர்ந்து சீட் காந்திநகர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர் 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக இமாலய முன்னிலையுடன் செல்கிறது. இதுவரை 155 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக.

குஜராத் தேர்தல் முடிவுகள்
குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் உள்ள 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்திலேயே பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பாஜக தொடர்ந்து முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இதனால், ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது பாஜக.

காங்கிரஸ் கடும் பின்னடைவு
காங்கிரஸை குஜராத்தில் எழவே விடாமல் தோல்வியைப் பரிசளித்துள்ளது பாஜக. தற்போதைய நிலவரப்படி பாஜக இதுவரை 155 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், இதுவரை இல்லாத அளவு பலத்தோடு குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக.

ஹர்திக் படேல் ஆரம்பத்தில் பின்னடைவு
காங்கிரஸ் கட்சியில் இருந்த பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் சேர்ந்தார். 2015-ஆம் ஆண்டு முதல் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்க போராடியதற்காக பிரபலமானவர். படேல் சமூகத்தினரின் வாக்கு வங்கி அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை ஹர்திக் படேல் விராம்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

முன்னிலையைப் பிடித்தார்
இன்றைய வாக்கு எண்ணிக்கை தொடங்கி 9 மணி வரை ஹர்திக் படேல் பின்தங்கி வந்தார். ஆம் ஆத்மி கட்சியின் அமர்சிங் தாக்கூர் இங்கு முன்னிலையில் இருந்தார். ஆனால், இந்த நிலை பின்னர் மாறியது. விராம்கம் தொகுதியில் ஹர்திக் படேல் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது, 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கோட்டை எட்டி வருகிறார் ஹர்திக் படேல்.

ஆம் ஆத்மியுடன் போட்டி இல்லை
இந்த வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள ஹர்திக் படேல், இது பாஜகவின் பணிகளுக்கும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும் கிடைத்த வெற்றி, . அடுத்த 20 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துவோம். ஆம் ஆத்மி கட்சியுடன் போட்டி இல்லை. விரம்கம் தொகுதியின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை வெற்றிபெறச் செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

அல்பேஷ் தாக்கூர்
அதேபோல சமூக செயற்பாட்டாளரும், கடந்த தேர்தலில் பாஜகவை கடுமையாக எதிர்த்தவருமான, காங்கிரஸில் இருந்த அல்பேஸ் தாக்கூர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சீட் பெற்ற அல்பேஷ் தாக்கூர் காந்திநகர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் அல்பேஷ் தாக்கூர் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்த நிலையில் தற்போது 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிமுகம் காட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications