குஜராத் உள்ளாட்சி தேர்தல் பாஜக பிரம்மாண்ட வெற்றி.. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி
அஹமதாபாத்: கடந்த 2023ம் ஆண்டு நகராட்சி மற்றும் ஊராட்சி தேர்தல்களில் 27 சதவீதம் ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்து குஜராத் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு, முதல்முறையாக, குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்தது. இதில் மொத்தம் உள்ள 68 நகராட்சியில் 60 நகராட்சியை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
2023-ம் ஆண்டு குஜராத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாஜக 68 நகராட்சிகளில் 60-ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் பாஜகவிற்கு சவாலான ஜாம்நகர் நகராட்சியில் 60 இடங்களில் 48 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தை பல வருடமாக பாஜக ஆண்டு வரும் நிலையில் இப்போதும் ஜெயித்துள்ளது. காந்திநகர், கபத்வஞ்ச் மற்றும் கத்லால் ஆகிய ஊர்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸிடம் இருந்து இந்த முறை 15 நகராட்சிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு நகராட்சியை மட்டுமே இந்த முறை கைப்பற்றியுள்ளது. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள சாலயா நகராட்சியை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதே நேரத்தில் குஜராத் எம்எல்ஏ காந்தல் ஜடேஜா தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, குடியானா நகராட்சியில் பாஜகவை வீழ்த்தி, கைப்பற்றியுள்ளது.
2022 குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக பிரம்மாண்டமாக ஜெயித்திருந்தது. கடந்த முறை லோக்சபா தேர்தலில் 26 இடங்களில் 25 இடங்களை வென்றது. ராதன்பூர், மஹுதா மற்றும் ராஜுலா உட்பட காங்கிரஸால் முன்னால் கைப்பற்றப்பட்ட பல முக்கிய நகராட்சிகளிலும் பாஜக வென்றுள்ளது. அதேநேரம் மங்ரோல், தாகோர், அங்க்லாவ், சோட்டாடேபூர் மற்றும் வவ்லா ஆகிய ஐந்து நகராட்சிகளில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.. இழுபறி நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications