ராகுலை போல் சிக்கல்? அவதூறு வழக்கில் இன்று குஜராத் கோர்ட்டில் ஆஜராகும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?
அகமதாபாத்: குஜராத்திகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அவருக்கு ராகுல் காந்தியை போல் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநில துணை முதல்வராக இருப்பவர் தேஜஸ்வி யாதவ். லாலு பிரசாத்தின் மகனான இவர் தற்போது ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக உள்ளார். லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கு, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் தேஜஸ்வி யாதவ் தான் கட்சியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் தேஜஸ்வி யாதவ் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையானது. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மார்ச் 21ம் தேதி தேஜஸ்வி யாதவ் பேட்டியளித்தார்.
அப்போது அவர் குஜராத் மக்களை இழிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது. குஜராத்திகள் என்பவர்கள் மூர்க்கத்தனமானவர்கள், மோசடி செய்பவர்களாக இருக்க முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. குஜராத் மக்களை தேஜஸ்வி யாதவ் அவமதித்து விட்டதாக பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்தனர். மேலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க தேஜஸ்வி யாதவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹரேஷ் மேத்தா என்பவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மெட்ரோபாலிட்டனர் நீதிமன்றம் தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கை மாஜிஸ்திரேட் டிஜே பார்மர் விசாரித்து தேஜஸ்வி யாதவுக்கு சம்மன் அனுப்பினார்.
அதாவது வழக்கில் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22ந் தேதி அகமதாபாத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இது தேஜஸ்வி யாதவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தேஜஸ்வி யாதவ் இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் சர்ச்சையில் சிக்கினார். இதுதொடர்பாக ராகுலுக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததால் அவர் தற்போது எம்பியாக தொடர்கிறார்.
அந்த வகையில் தேஜஸ்வி யாதவ் மீதும் தற்போது குஜராத் அகமதாபாத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் ராகுலை போல் தேஜஸ்வி யாதவுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தால் அவரும் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதனால் இந்த வழக்கும் அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications