2 கைகளும் இல்லாத இஸ்லாமியர் கல்வீசினாராம்... புல்டோசரில் கடையை இடித்து வழக்கு பதிந்த ம.பி. போலீஸ்
போபால்: மத்திய பிரதேசத்தில் கை இல்லாத இஸ்லாமியர் கல் வீசி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரது கடையை அம்மாநில அரசு இடித்து வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமி பண்டிகையின்போது மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் மதக் கலவரங்கள் வெடித்தன.
காவிக்கொடிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தி ஊர்வலமாக சென்ற இந்துத்துவ அமைப்பினர் சிறுபான்மையினர்கள் வசிக்கும் பகுதிகள் மசூதிகள் அருகே சென்று தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் மதக்கலவரங்கள் வெடித்தன. பீகாரில் மசூதியின் மீதேறி காவிக்கொடியை நடும் காட்சிகள் வைரலாகின.

கலவரமும் புல்டோசர் கலாச்சாரமும்
இதில் குறிப்பாக மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் வெடித்தது. இதில் கலவரத்துக்கு காரணமானவர்கள் எனக்கூறி பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மத்திய பிரதேச காவல்துறை, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்காமலேயே சட்ட விதிகளை மீறி அவர்களின் வீடுகள், கடைகளை புல்டோசர்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது. இவ்வாறு தனது கடையை இழந்தவர் தான் வசீம் ஷேக்.

2 கை இல்லாதவர் கல்வீசினாரா?
இவர் ராம நவமி ஊர்வலத்தின்போது கற்களை வீசி கலவரத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளது மத்திய பிரதேச காவல்துறை. இதில் சோகம் கலந்த உண்மை என்னவென்றால், வசீம் ஷேக்கிற்கு இரண்டு கைகளுமே இல்லை. ஆனால், ராமநவமி ஊர்வலத்தில் கற்களை வீசியதாகக் கூறி மத்திய பிரதேச காவல்துறை தயாரித்த பெயர் பட்டியலில் வசீம் ஷேக்கின் பெயரும் உள்ளது.

வாழ்வாதாரம் இழந்த வசீம்
2005 ஆம் ஆண்டு மின்சார விபத்து ஒன்றில் தனது இரண்டு கைகளையுமே பறிகொடுத்து தவித்த வசீம் ஷேக், சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த கடையை நடத்தி வந்திருக்கிறார். 2 குழந்தைகள் உட்பட 5 பேர்களை கொண்ட இவரது குடும்பம் இந்த கடையின் வருமானத்தையே நம்பி இருந்துள்ளது.

சிறையில் இருப்பவர்கள் கலவரம் செய்ததாக வழக்கு
இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மேலும் 3 இஸ்லாமியர்களுக்கு நடந்துள்ளது. ஷாபாஸ், ஃபக்ரு மற்றும் ரவூஃப் ஆகிய மூவரும் வேறொரு வழக்கிற்காக கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், சிறையில் இருந்தவர்கள் கல்வீசியதாகக் கூறி அவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்ததுடன் அதில் ஒருவரின் வீட்டையும் இடித்துள்ளது.
Recommended Video

மத்திய பிரதேச போலீஸ் விளக்கம்
இதுபோல் மொத்தம் 16 வீடுகளை மத்திய பிரதேச காவல்துறை புல்டோசர்களை கொண்டு இடித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல் அதிகாரி மனோகர் சிங், புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications