"ஹரியானாவில் அடிக்கும் அரசியல் சூறாவளி.." ஆட்சியை பிடிப்பது காங்கிரஸ்.. பாஜகவுக்கு தோல்வி உறுதியாம்
சண்டிகர்: ஹரியானாவில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மிக மோசமாக இருப்பதாக விமர்சித்தார். மேலும், ஹரியானா மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர், அங்குக் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் தெரிவித்தார்.
ஹரியானாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அரசியல் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

ராகுல் காந்தி: இதற்கிடையே சமீபத்தில் அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஹரியானாவில் வேலைவாய்ப்பின்மை தலை விரித்து ஆடுவதாகச் சாடினார். இதன் காரணமாகவே ஹரியானா இளைஞர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
கர்னாலில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஜாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பாஜக மக்களைப் பிளவுபடுத்துவதாகவும் தேர்தல் ஆதாயங்களுக்காக சமூகத்தில் நிலவும் அமைதியைச் சீர்குலைக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்தார்.
சாதி வாரியான கணக்கெடுப்பு: அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், "நாட்டில் எத்தனை எஸ்சி, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர் என்பது தெரிய வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த எத்தனை ஏழைகள் உள்ளனர் என்பதை அறிய விரும்புகிறோம். நாட்டில் உள்ள 250 பெரிய நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஒரு எஸ்சி அல்லது ஓபிசி கூட இல்லை. மத்திய அரசில் உள்ள 90 செயலாளர்களில் மூன்று பேர் மட்டுமே எஸ்சிக்கள். ஆனால், அவர்கள் மக்கள் தொகையில் 15%ஆக உள்ளனர்.
இதுதான் உண்மை. இதன் காரணமாகவே நாங்கள் நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சாதி வாரி கணக்கெடுப்பை மோடி நடத்துவாரா இல்லையா எனத் தெரியாது.. ஆனால், எங்கள் ஆட்சியில் கண்டிப்பாகச் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
காங்கிரஸ் புயல்: ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறப் போகிறது. ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் புயல் அடிக்கப் போகிறது. அந்த புயலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைக்கப் போவது உறுதி.
அமெரிக்கா பயணம்: நான் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கிருந்த ஹரியானாவைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் பேசினேன். அவர்களுக்கு ஹரியானா மாநிலத்தில் வேலை கிடைக்கவில்லையாம். இதனால் அவர்கள் நல்ல எதிர்காலத்தைத் தேடி அங்கு வந்ததாகச் சொன்னார்கள்.. ஹரியானா இளைஞர்கள் ஏன் அமெரிக்கா செல்கிறார்கள்? ஏனென்றால் இங்கு வேலை இல்லை.

நான் டல்லாஸ் நகரில் அவர்களைப் பார்த்தேன். ஒரே ரூமில் 15-20 பேர் இருக்கிறார்கள். . அவர்களிடம் எப்படி அமெரிக்கா வந்தீர்கள் எனக் கேட்ட போது தான். அவர்கள் அந்த கொடுமையை விளக்கினார்கள். பல நாடுகள் வழியாகப் பயணித்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். இங்கு வேலை கிடைக்காததால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்கிறார்கள். பலரும் பணத்தையும் உயிரையும் கூட இழந்துள்ளனர்.
இப்படி அமெரிக்காவுக்குள் நுழையவே அவர்கள் ரூ. 35 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அதிக வட்டிக்குக் கடன் வாங்கியோ விவசாய நிலத்தை விற்றோ தான் இந்த பணத்தைப் புரட்டியுள்ளனர். இங்கு பாஜக அரசு ஹரியானாவை அழித்துவிட்டது. ஹரியானா பாஜக அரசு தனது வேலையைச் செய்யத் தவறியதால், இங்குள்ள மக்கள் கஷ்டப்படுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications