அமலாக்கத்துறைக்கு எதிராக.. ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை.. பரபரக்கும் ஜார்கண்ட்
ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் இன்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்கத்துறையின் சம்மன்களுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த ரிட் மனு நாளை (வியாழக்கிழமை) ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ல் நடந்த சட்டபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 29 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதகிளிலும், ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், என்சிபி (ஏபி) கட்சிகள் தலா ஒரு இடத்திலும், ஏஜேஎஸ்யூ, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும் வென்றனர்.
இதையடுத்து ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இப்படி முதல்வரானவர் தான் ஹேமந்த் சோரன். இந்நிலையில் தான் நில சுரங்க முறைகேடு வழக்கில் ஹேமந்த் சோரன் சிக்கி உள்ளார். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10க்கும் அதிகமான சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்து இருந்தார். அதாவது அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் தான் கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பிறகு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால் அவர் ஜனவரி 31ல் (இன்று) மதியம் 1 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் விசாரணை நடத்தி கொள்ளலாம் எனக்கூறி அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார். இதனை அமலாக்கத்துறை ஏற்காத நிலையில் கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் 30 மணிநேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது பிஎம்டபிள்யூ உள்பட 2 கார், ஆவணங்கள், ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த வேளையில் சுமார் 30 மணிநேரம் ஹேமந்த் சோரன் மாயமாகி இருந்தார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து மறுநாள் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள வீட்டுக்கு வந்தார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதை முன்கூட்டியே அறிந்த ஹேமந்த் சோரன் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடத்தி புதிய முதல்வராக சாம்பை சோரனை தேர்வு செய்தார். இதையடுத்து ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜார்கண்ட் முதல்வரான தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாம்பை சோரன் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோர உள்ளார்.
முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி கல்பனா சோரனும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். தற்போது ராஞ்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தனக்கு வழங்கிய சம்மன்களை எதிர்த்து ஹேமந்த் சோரன் சார்பில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த மனு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications