குடியரசு தினவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்.. உளவு துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக 230 முதல் 250 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் உளவு துறை தகவல் தெரவிக்கின்றது.
குடியரசு தின விழா நாடுமுழுவதும் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்ட எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாகவும், ஆனால் எத்தனை பேர் அங்கு உள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹீதின் இயக்க தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலையடுத்து தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் குடியரசு தினவிழா அன்று விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் அல்லது விமான கடத்தல் சம்பவங்களில் ஈடுபடலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மும்பையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்த முயன்றது போன்று மீண்டும் நடைபெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்படவுள்ளனர். பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள்ளேயும், வெளியேயும் அனுமதிப்படுவர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் உள்ளூர் காவல்துறையினரை அதிகளவில் குவித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
