திருமண ஆசை காட்டி உடல் உறவு.. ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது- அலகாபாத் ஹைகோர்ட்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமண ஆசைக்காட்டி இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. ஆனால், இதேபோன்று எல்லா நேரங்களிலும் ஆண்கள் மீதே தவறு இருக்காது என்பதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். காதலித்து வந்த காலத்தில் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 2019ம் ஆண்டு இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இளைஞர் மீது பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அடுத்த ஆண்டே இவரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து இளம்பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞரை விடுவித்தது சரி என்றும், ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என்று சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளது. தற்போது இந்த வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 2019க்கு முன்னர் வரை 5 ஆண்டுகள் இளைஞரும், இளம் பெண்ணும் காதலித்து வந்திருந்தனர். இந்த காலத்தில் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் 2019ல் இளைஞர் இந்த உறவை முறித்திருக்கிறார்.
அதன் பின்னர்தான் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. அங்கு இளைஞர் தன் தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறார். அதாவது, காதலிப்பதற்கு முன்னர் இளம் பெண்ணின் சாதி குறித்து விசாரித்திருக்கிறார். இளம்பெண் தன்னை யாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராவார்.
அதேபோல தனக்கு ஏற்கெனவே திருமணமாகி இருக்கிறது என்பதையும் அப்பெண் மறைத்திருக்கிறார். எனவே இந்த உண்மைகள் தெரிய வந்தபோது இளைஞர் தன் உறவை துண்டித்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "யாரை யார் ஏமாற்றினார்கள் என்று தீர்ப்பளிப்பது கடினம். தன் திருமணத்தை மறைத்து, சாதியை மறைத்து 5 ஆண்டுகள் வரை ஒருவருடன் இளம் பெண் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இவர்கள் அலகாபாத் மற்றும் லக்னோவில் லாட்ஜ்களில் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். எனவே விசாரணை நீதிமன்றம் இளைஞரை விடுவித்திருக்கிறது.
வழக்கில் இளம்பெண்ணை, இளைஞர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றினார் என்றும் அவரை 5 ஆண்டுகள் அனுபவித்து வந்திருந்தார் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். திருமணத்திற்கு பின்னர் அதை மறைத்து மற்றவர்களுடன் இணைந்திருக்கும்போது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுவதை, திருமணத்திற்கு முந்தைய குற்றச்சாட்டுகளை போன்று அணுக முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications