சொந்த மாநில மக்களுக்கு தனியாரில் 75% ஒதுக்கீடு.. ஹரியானா அரசின் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்!
சண்டிகர்: தனியார் துறையில் சொந்த மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கி ஹரியானா அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
தனியார் நிறுவனங்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியானா அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டம் கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, தனியார் துறையில் மாதம் ரூ 30,000 வரை சம்பளம் பெறும் அனைத்து பதவிகளுக்கும் 75% ஒதுக்கீடு பொருந்தும். இட ஒதுக்கீட்டு சலுகை பெற ஒருவர் ஹரியானாவில் பிறந்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.

இந்தச் சட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை. இந்தச் சட்டத்தை எதிர்த்து குருகிராம் தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட பலர் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.சந்தாவாலியா, ஹர்ப்ரீத் கவுர் ஜீவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குருகிராம் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஹரியானா அரசு இயற்றி உள்ள சட்டம் சட்டவிரோதமானது. வேலை வழங்குபவர்களுக்கு உள்ள உரிமைகளுக்கு எதிரானது. திறமை மிக்கவராகவும், உரிய கல்வித் தகுதி உள்ளவராகவும், வேலைக்கு பொருத்தமானவராகவும், இந்தியராகவும், நாட்டின் எந்த பகுதியிலும் பணி செய்யத் தயாராக இருப்பவராகவும் இருக்க வேண்டும் என்றுதான் அரசியல் சாசனம் கூறுகிறது.
ஹரியாணா அரசு இயற்றி உள்ள இந்த இட ஒதுக்கீடு சட்டம் அரசியல் சாசனத்தின் நெறிமுறைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முரணாக உள்ளது. இத்தகைய சட்டத்தின் மூலம் ஹரியானா அரசு பொது நலன் கருதி அல்லாமல், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது என வாதிட்டார்.
அதேசமயம், ஹரியானா அரசு இந்தச் சட்டம் ஒரு "புவியியல் வகைப்பாடு" என்று வாதிட்டது. இது அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்டது, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாநிலத்தை முன்னேற்றும் என்றும் ஹரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு வாதங்களை முன்வைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஹரியானா மாநில அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஹரியானா மாநில அரசின் உள்ளூர் வேட்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2020 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், சொந்த மாநில மக்களை மட்டும் வேலைக்குச் சேர்க்குமாறு தனியார் நிறுவனங்களை நிர்பந்திக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் எல்லா மாநிலங்களும் இதுபோன்ற செயற்கை வேலிகளை எழுப்பத் தொடங்கி விடுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், குறிப்பாக ஜாட் சமூக மக்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு இந்த முடிவு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹரியானா அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications