இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் வெள்ளம்.. மணாலி நெடுஞ்சாலை முடங்கியது! மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அங்குப் பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சூழலில், முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மழை இன்னும் சில நாட்கள் தொடரும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வட இந்தியாவில் இப்போது பருவமழை சீசனில் மழை கொட்டி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக இமயமலை கீழே இருக்கும் மாநிலங்களில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அப்படித் தான் இப்போது மீண்டும் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் ஓடும் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை
பலத்த மழை, நிலச்சரிவு காரணமாகப் பல வீடுகள், கடைகள் மற்றும் ஹோட்டல் கூட அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பியாஸ் நதியில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத சீற்றம் காரணமாக மணாலியில் இருந்த ஹோட்டல், நான்கு கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நதி நீர் பெருக்கெடுத்து ஓடியதால், அங்குள்ள மணாலி- லே நெடுஞ்சாலயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. அங்கு வசிக்கும் பல நூறு மக்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மிக மோசம்
மணாலி மட்டுமின்றி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் அண்டை இமயமலை மாநிலங்களின் பல பகுதிகளும் கனமழை கொட்டி வருகிறது. மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலைகளின் முக்கியமான பகுதிகள் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அங்குச் சிக்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்ராவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரியாசியில் உள்ள வைஷ்ணோ தேவி கோயிலுக்கான யாத்திரை நிறுத்தப்பட்டது. மணாலியில் பஹாங்கில் ஒரு இரண்டு மாடி கட்டிடம் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படி மாநிலம் முழுக்க அங்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
முடங்கிய நெடுஞ்சாலை
பியாஸ் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாட்லிகுஹலில் உள்ள பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. மேலும், அங்குள்ள பிரபலத் தொழிற்சாலையையும் வெள்ள நீர் மூழ்கடித்தது. கன்வி குத் பகுதியில் இருந்தும் குலுவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. லே-மணாலி நெடுஞ்சாலை அனைத்து வகையான போக்குவரத்துக்கும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. குலு மற்றும் மணாலி இடையே உள்ள நெடுஞ்சாலையின் சில பகுதிகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
சரியும் கட்டிடங்கள்
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மாண்டி நகரில் 40 கடைகளுடன் இருந்த இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அவை முன்னதாகவே பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டு, உள்ளே இருந்த கடைகள் காலி செய்யப்பட்டன. இதனால் வெள்ளம் ஏற்பட்ட போதும் உயிரிழப்புகள் இல்லை. கின்னார் மாவட்டத்தின் கன்வி கிராமத்திலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திங்கட்கிழமை முதல் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இன்னுமே கூட அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது. இதற்கிடையே அங்கு 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பருவமழை இமாச்சலப் பிரதேசத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 25 வரை மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் அங்கு 156 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் காணாமல் போயுள்ளனர். இது கனமழையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications