உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. 4வது முறையாக நீட்டித்த மத்திய அரசு!
டெல்லி: மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறை. நாட்டில் பல்வேறு சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் நிலவி வரும் சூழலில் இந்த பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறைச் செயலாளராக அஜய் குமார் பல்லா கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் தனது 60 வயதில் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு முறை உள்துறை செயலராக அவரது பதவி நீட்டிக்கப்பட்டது.

தற்போது அஜய் பல்லாவுக்கு 4வது முறையாக பதவி நீட்டிப்பு அளிப்பதற்கான உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 22ஆம் தேதி வரை உள்துறை செயலராக அஜய் குமார் பல்லா பதவியில் இருப்பார்.
இந்த பதவி நீட்டிப்பின் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் போதும் அஜய் பல்லா உள்துறைச் செயலராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 1984ஆம் ஆண்டு பேட்ச் அசாம்-மேகாலயா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அஜர் பல்லா, உள்துறை செயலர் பதவிக்கு முன்பு மின்சாரத் துறை செயலர், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
அஜய் குமார் பல்லா உள்துறை செயலராக பதவி வகித்து வரும் காலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தல் போன்ற முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மணிப்பூரில் நிலவி வரும் வன்முறைச் சூழல், காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் எழுச்சி போன்ற பல உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், உள்துறை செயலர் பதவி நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் குமார் பல்லாவின் பதவி நீட்டிப்புக்கு ஒருநாளுக்கு முன்பு, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு 3-வது முறையாக ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications