நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சியும், அத்வானியும்!
டெல்லி: பாரதிய ஜனதா எதிர்கொண்ட எத்தனையோ லோக்சபா தேர்தல்களுக்கு வியூகம் வகுத்து தளபதியாக, தலைவராக "இரும்பு மனிதராக" பெயரெடுத்த எல்.கே.அத்வானி இப்போது முடக்கப்பட்டுக் கிடக்கிறார்.. குஜராத்தின் காந்திநகர் தொகுதியில்தான் போட்டியிடுகிறார் என்றபோது இன்னமும் அங்கே எட்டிக்கூட பார்க்காதவராக இருக்கிறார்.. இவை அனைத்துக்குமே காரணகர்த்தாக இருப்பவர் கால்நூற்றாண்டுக்கு முன்னால் இதே அத்வானியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிதான்.
1970களின் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் மோடி இருந்த போது அவருக்கு குருவாக இருந்தவர் அத்வானி. பின்னாளில் பாஜக உருவானது.. ஹிந்துத்துவா சிந்தனைகள் வேர்விட்டு விளைச்சலைத் தந்து கொண்டிருந்த குஜராத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டினார் அத்வானி.
அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் பாஜகவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் மோடி. இந்நிலையில் அத்வானி தமது லட்சியத்தை நிறைவேற்றக் கூடியவராக நரேந்திர மோடியையே தத்துப்பிள்ளையாக்கிக் கொண்டார்.

அத்வானியின் கைபிடித்து அரசியல் பயணம்..
இதனாலேயே 1985 ஆம் ஆண்டு முதல் அத்வானியை தமது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. 1988ஆம் ஆண்டு குஜராத் மாநில பாஜகவின் பொதுச்செயலரானார் மோடி.

அத்வானியின் ரத யாத்திரை காலத்து சாரதி..
19900ம் ஆண்டு அத்வானி குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரத யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரையின் போது அத்வானிக்கு அனைத்துமாக இருந்தவர் நரேந்திர மோடிதான்.

அத்வானி குடும்பத்துடன் நெருக்கமாக..
அத்வானியின் வாகன சாரதியாகவும் இருந்தார்.. அவரது முதன்மை உதவியாளராகவும் இருந்தார் நரேந்திர மோடி. இது அத்வானி குடும்பத்துடன் மோடியை மிகவும் நெருக்கமான உறவாக்கி வைத்தது. அத்வானியின் மகன் ஜயந்த் மற்றும் மகள் பிரதீபா ஆகியோருடனும் மோடி குடும்ப உறவாக பழகினார்.

அன்று காரில் இறக்கிவிடப்பட்டார்...
அந்த யாத்திரையின் போது நடந்த ஒரு சம்பவம் இப்போதும் பாஜக மூத்த தலைவர்களால் நினைவுகூறப்படுகிறது.. யாத்திரையாக வந்த அத்வானி காந்திநகர் சர்க்யூட் ஹவுஸ் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் பின் சீட்டில் கேசுபாய் படேலும் அத்வானியும் அமர்ந்திருந்தனர். கேசுபாயிடம் நீண்டகாலம் டிரைவராக இருந்தவர் காரை ஓட்டி வந்தார். அவரது இருக்கைக்கு அருகே மோடி அமர்ந்திருந்தார்.

நடந்து போகச் சொன்ன கேசுபாய்..
சர்க்யூட் ஹவுசு அருகே பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கோவிந்தாச்சார்யா நடந்து சென்று கொண்டிருந்தார். உடனே அந்த டிரைவர் வண்டியை நிறுத்தினார். அப்போது கேசுபாய் படேல், மோடியை கீழே இறங்கச் சொல்லி கோவிந்தாச்சார்யாவை காரில் ஏறச் சொன்னார். மோடியும் நடந்தே சர்க்யூட் ஹவுஸ் சென்றடைந்தார். இது நடைபெற்றது 25 ஆண்டுகளுக்கு முன்பு... ஆனால் பின்னாளில் கேசுபாயை காணாமலே போகச் செய்து பாஜகவையே "மோடிமயமாகி"விட்டார் அன்று நடந்த மோடி என்பதுதான் நிதர்சனம்.

1995- வெற்றிக்கு வியூகம் வகுத்த மோடி
1995ஆம் ஆண்டு குஜராத்தில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த வெற்றிக்கு காரணமாக சொல்லப்பட்ட காரணிகள் மூன்று. ஒன்று கேசுபாய் படேலுக்கான மக்கள் ஆதரவு, சங்கர்சிங் வகேலாவின் உழைப்பு, நரேந்திர மோடியின் வியூகம்தான் அவை. அப்போது முதல்வராக பொறுப்பேற்ற கேசுபாய் படேல், வாஜ்பாயை விட அத்வானிக்குத்தான் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால் சங்கர்சிங் வகேலா கலகக் குரல் எழுப்பப் போய் அந்த பாஜக ஆட்சி 8 மாதங்களில் கவிழ்ந்து போனது. வகேலா, தனிக்கட்சி தொடங்கி காங்கிரஸ் ஆதரவுடன் குஜராத்தில் ஆட்சி அமைத்தார். அப்போது வகேலாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவராக இருந்தார் மோடி. மோடியின் தலையீடுதான் வகேலா கலகக் குரல் எழுப்பவும் காரணமாக இருந்தது.

டெல்லிக்கு ஜாகை மாற்றம்
இதில் இருந்து மோடியை காப்பாற்றுவதற்காக அத்வானி அதிரடி முயற்சி மேற்கொண்டார். நரேந்திர மோடியை டெல்லிக்கு வரவழைத்தார். அத்துடன் ஹரியானா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அத்வானி வீடே கதி
அந்த கால கட்டத்தில் டெல்லியில் வசித்த நரேந்திர மோடி பெரும்பாலும் இருந்தது அத்வானியின் இல்லத்தில்தான்.. மோடியைப் பொறுத்தவரையில் அத்வானி வீடுதான் 2-வது வீடு.

வாஜ்பாய் பக்கமே திரும்பாத மோடி
எப்பொழுதும் அத்வானியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அவரை தனது குருவாக அழைத்துக் கொண்டார். மோடி ஒருபோதும் வாஜ்பாய் பக்கம் திரும்பிப் பார்த்ததும் கிடையாது. இதன் உச்சமாக 1998ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலராகவும் உயர்ந்தார் மோடி.

குஜராத்தை வளைத்த மோடி
அதே ஆண்டு குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அனைத்து கோஷ்டிகளுக்கும் உரிய வாய்ப்பு கொடுத்து குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்தார் மோடி. இவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருந்தவர் அத்வானிதான். அதே காலகட்டத்தில் பாஜகவில் பெரும் சக்தியாக உருவெடுத்தவர் பிரமோத் மகாஜன். இதனால் மோடியை அத்வானி முழுமையாக ஆதரித்தார்.

அத்வானி ஆசியுடன் வெளியேற்றப்பட்ட கேசுபாய்
அத்துடன் குஜராத்தில் 2001ஆம் ஆண்டு மிகப் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட காலத்தில் அரசியல் நிலநடுக்கத்தையும் எதிர்கொண்டது. அப்போதைய முதல்வர் கேசுபாய் படேலுக்கு எதிராக ஹரேன் பாண்டியா, சஞ்சய் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இணைந்து கலகம் உருவாக்கினர். இந்த கலகத்துக்கு அத்வானியின் ஆசீர்வாதம் முழுமையாக இருந்தது. அப்போது கேசுபாய் படேலைவிட எதிர்காலத்தில் நரேந்திர மோடி தமக்கு பெரும் உதவியாக இருப்பார் என்று கருதினார் அத்வானி. அதே நேரத்தில் மோடி, தேசிய அளவில் இவ்வளவு பெரிய சவாலான தலைவராக வளரமாட்டார் என்ற நம்பிக்கையும் அத்வானிக்கு இருந்தது.

பிடியை இறுகப் பிடித்த மோடி
அதானேலேயே குஜராத் முதல்வர் பதவியில் மோடியை அமரவும் வைத்தார் அத்வானி. அப்போதே கேசுபாய் படேலுக்கு துணை முதல்வர் பொறுப்பெல்லாம் தர முடியாது.. குஜராத் பாஜகவை என் பொறுப்பில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கறாராக அத்வானி, வாஜ்பாயிடம் கூறியும்விட்டார் மோடி. மோடி ஒரு தேசிய தலைவராக வரமாட்டார் என்று 20 ஆண்டுகாலத்துக்கு முன்பு அத்வானி கருதினார்.. ஆனால் கடந்த 20 ஆண்டுகாலமாக தமது அடுத்த இலக்கு தேசிய அரசியலின் தலைமைத்துவம்தான் என்பதை மெல்ல மெல்ல வலுப்படுத்திக் கொண்டவராகவே மோடி விஸ்வரூபமெடுத்துவிட்டார்.

காணாமல் போன தளகர்த்தர்கள்
காலப்போக்கில் கேசுபாய் படேல் என்ற பாஜகவின் பிம்பம் கரைந்து போனது.. மோடியுடன் கை கோர்த்து கேசுபாயை வெளியேற்றிய அத்வானியின் தளகர்த்தர்களில் ஒருவரான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். சஞ்சய் ஜோஷி, ஆபாச சிடி விவகாரத்தில் சிக்கி பின்னடைவை சந்தித்தார். ஆனாலும் விடாது கருப்பாக 2012ஆம் ஆண்டு வரை மோடிக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தார் சஞ்சய் ஜோஷி. 2012ஆம் ஆண்டில் மோடியின் கை பாஜகவில் ஓங்கி இருந்தது. மும்பையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுவுக்கு சஞ்சய் ஜோஷியும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் சஞ்சய் ஜோஷியை நீக்கினால்தான் தான் வருவேன் என அடம்பிடித்தார் மோடி. இதையும் அத்வானி அப்போது மெளனமாக வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. கடைசியில் சஞ்சய் ஜோஷி பாஜகவைவிட்டே வெளியேறவும் நேரிட்டது.

மோடிக்கு எதிராக அத்வானி
காலமும் மாறின.. காட்சிகளும் மாறின.. இப்போது அத்வானியே ஓரம்கட்டப்பட்டு அத்வானியே மோடியின் உச்ச வளர்ச்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அத்துடன் அத்வானியின் அரசியல் எதிர்காலத்தை காந்திநகரில் தீர்மானிக்கப் போகிறவராகவும் மோடியே விஸ்வரூபமெடுத்திருப்பது வரலாற்றில் விந்தைதான்..












Click it and Unblock the Notifications