Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊருக்குள் ஒருவர் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் இல்லை.. சுட சுட பசி தீர்க்கும் பயோ கேஸ்! அசத்தும் கிராமம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் இன்று இல்லத்தரசிகளின் முதன்மைப் கவலை - சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுதான். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள 'மோதிப்பூர்' (Motipur) கிராமத்திற்குள் நுழைந்தால், அங்கே ஒரு சிலிண்டரை கூட உங்களால் பார்க்க முடியாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் உள்ள 120 குடும்பங்கள் ஒற்றை எல்.பி.ஜி சிலிண்டரை கூட முன்பதிவு செய்யவில்லை. "சிலிண்டர் தீர்ந்துவிடுமோ?" என்ற பயமில்லை, "விலை ஏறிவிட்டதே" என்ற கவலையுமில்லை. இவர்களது சமையலறைகளில் எரியும் அடுப்புகளுக்குப் பின்னால் இருப்பது ஒரு மாபெரும் 'பயோ-கேஸ்' (Biogas) புரட்சி!

lpg cylinder


வீட்டுக்கு வெளியே ஒரு எரிவாயு ஆலை!

கிராமத்திற்குள் நுழைந்ததும் ஊடக பிரதிநிதியை வரவேற்கிறார் 55 வயதான கோபால் கோஸ்வாமி. ஊடக பிரதிநிதியின் விவரிப்பில் தொடர்ந்து அதை நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனது வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள ஒரு அமைப்பைக் காட்டி பெருமிதத்துடன் பேசுகிறார் கோபால் கோஸ்வாமி. "எங்கள் பஞ்சாயத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இதில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்தமாக பயோ-கேஸ் ஆலைகளை அமைத்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளாக என் வீட்டிற்குள் ஒரு சிலிண்டர் கூட வரவில்லை. டீ போடுவதில் தொடங்கி, குடும்பச் சமையல், குளிக்கத் தண்ணீர் சூடுபடுத்துவது, கால்நடைகளுக்குத் தீவனம் தயாரிப்பது என அனைத்தும் இந்தச் சாண எரிவாயுவிலேயே முடிந்துவிடுகிறது."

அவர் சொல்வது போல, மோதிப்பூர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கருப்பு நிறத்திலான பெரிய பலூன் போன்ற அமைப்புகள் தென்படுகின்றன. இவைதான் அந்தப் பகுதியின் 'எரிசக்தி மையங்கள்'.


சிலிண்டரை விட வேகமான ஜுவாலை!

நமக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பயோ-கேஸ் என்றால் அழுத்தம் (Pressure) குறைவாக இருக்குமோ? சமைக்க அதிக நேரம் எடுக்குமோ? நம் சந்தேகத்தைத் தீர்க்க கோபால் கோஸ்வாமியின் மகள் கிரண் நம்மை சமையலறைக்கு அழைத்தார்.

அங்கே சாதாரண எல்.பி.ஜி அடுப்பு போன்றே ஒரு அடுப்பு இருந்தது. ஒரு சிறிய வால்வைத் திறந்து தீக்குச்சியை உரசியதும், நீல நிற ஜுவாலை சீறிக்கொண்டு வந்தது. கிரண் சொல்கிறார்:

"இதன் வேகம் எல்.பி.ஜி-யை விட அதிகம். இதில் டீ போட்டால் சில நிமிடங்களிலேயே தயாராகிவிடும். விருந்தினர்கள் வந்தாலும் பயமில்லை, எவ்வளவு சமைத்தாலும் கேஸ் தீராது!"


இது எப்படி செயல்படுகிறது?

இந்த பயோ-கேஸ் ஆலை மிகவும் எளிமையான, அதேசமயம் அறிவியல் பூர்வமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரஸ் டெய்ரி (Saras Dairy) உதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது:

  1. கலவைத் தொட்டி (Mixing Tank): இங்கே 5 முதல் 8 கிலோ பசுஞ்சாணம் மற்றும் அதே அளவு தண்ணீர் சேர்க்கப்பட்டு நன்கு கலக்கப்படுகிறது.
  2. டைஜெஸ்டர் பலூன் (Gas Maker Balloon): தடிமனான பிளாஸ்டிக்கால் ஆன இந்த பலூன் பாதி தரைக்கு அடியிலும் பாதி மேலேயும் இருக்கும். சாணக் கரைசல் இங்கே செல்லும் போது, நிலத்தடி வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பத்தைப் பயன்படுத்தி நொதித்தல் (Fermentation) நடைபெற்று எரிவாயு உருவாகிறது.
  3. வெளியேற்றக் குழாய்: அதிகப்படியான எரிவாயு உருவானால் தானாகவே வெளியேறும் வால்வு உள்ளது. மீதமுள்ள கழிவு (Slurry) மற்றொரு தொட்டிக்குச் சென்றுவிடும்.

கழிவிலிருந்து வருமானம்: ஒரு இரட்டை லாபத் திட்டம்!

மோதிப்பூர் கிராமத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் சரஸ் டெய்ரி. இவர்கள் வெறும் எரிவாயு ஆலைகளை மட்டும் அமைத்துத் தரவில்லை, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளையும் (Bio-slurry) விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்குகிறார்கள்.

கிராமவாசி ரத்தன் சிங் இது குறித்துக் கூறும்போது, "நாங்கள் தினமும் ஒரு கூடை சாணத்தை உள்ளே போடுகிறோம். எங்களுக்குத் தேவையான எரிவாயு கிடைப்பதோடு, வெளியேறும் கழிவை ஒரு கிலோ 75 பைசா என்ற வீதத்தில் டெய்ரி நிர்வாகம் வாங்கிக்கொள்கிறது. இது எங்களுக்கு ஒரு கூடுதல் வருமானம்," என்கிறார்.


இயற்கை விவசாயத்தின் மறுமலர்ச்சி

இந்தத் திட்டம் எரிசக்தித் தேவையைத் தீர்ப்பதுடன் நின்றுவிடாமல், விவசாயத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி தேவராஜ் ஜாட் தன்னிடம் உள்ள 12 பசுக்களின் சாணத்தை இந்த ஆலைக்குக் கொடுக்கிறார்.

"இந்த ஆலை மூலம் கிடைக்கும் திரவ உரம் (Slurry) பயிர்களுக்குச் சிறந்த டானிக் போன்றது. இது பயிர்களுக்கு நோய் வராமல் தடுப்பதோடு, மகசூலையும் அதிகரிக்கிறது. மண்ணின் வளம் மீட்கப்படுகிறது," என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர்.


நவீன உரத் தொழிற்சாலை

கிராம மக்களின் கூட்டு முயற்சியால், சுமார் 2 ஹெக்டேர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ஒரு பிரம்மாண்டமான இயற்கை உரத் தொழிற்சாலையை (Organic Fertilizer Plant) உருவாக்கியுள்ளனர். பயோ-கேஸ் ஆலைகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் இங்கே கொண்டு வரப்பட்டு, இயந்திரங்கள் மூலம் பதப்படுத்தப்பட்டு 25 கிலோ மூட்டைகளாக அடைக்கப்படுகின்றன. ஒரு மூட்டை ₹375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.


மோதிப்பூர் சொல்லும் பாடம்

முன்னாள் அமைச்சர் ராம்லால் ஜாட் மற்றும் சரஸ் டெய்ரி அதிகாரிகளின் தீர்க்கதரிசனத்தால் உருவான இந்த 'மோதிப்பூர் மாடல்', இன்று இந்தியாவின் மற்ற கிராமங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

எல்.பி.ஜி சிலிண்டர் விலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதை விட, நம்மிடம் உள்ள இயற்கை வளங்களைக் கொண்டு எப்படித் தன்னிறைவு அடையலாம் என்பதற்கு மோதிப்பூர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

"குப்பை என்று நாம் நினைப்பது, முறையாகக் கையாண்டால் அதுவே குபேர சொத்து" என்பதை மோதிப்பூர் மக்கள் உலகுக்கு உரக்கச் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+