ஹேமமாலினி கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 4 வயதுக் குழந்தை.. தவிப்பில் குடும்பம்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாலிவுட் நடிகை ஹேமமாலியின் மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு நேற்று தனது மெர்சிடீஸ் பென்ஸ் காரில் சென்றார். காரில் அவருடைய உதவியாளர் இருந்தார். காரை அவரது டிரைவர் மகேஷ் தாகூர் ஓட்டினார். கார் தவ்சா என்ற இடத்தில் வந்தபோது அதுவும் ஜெய்பூரில் இருந்து லால்சோத் சென்ற ஆல்டோ காரும் மோதியது.

ஆல்டோவில் ஹனுமன் மஹாஜன், அவரது மகள் சோனம்(4), மகன் சோமில்(5), மனைவி ஷிகா(35), சீமா(40) ஆகியோர் இருந்தனர். கார்கள் மோதிக் கொண்டதில் சோனம் பலியானார். ஹேமமாலினிக்கு நெற்றி, மூக்கில் காயம் ஏற்பட்டது.
காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹேமமாலியின் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கார் விபத்தால் நடிகை ஹேமமாலினிக்கு காயமாம். பாவம் புகைப்படத்தில் அவரது நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் ஏற்கனவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நேரத்தில் 4 வயது பெண் குழந்தை பலியானதை பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை.
பெண் குழந்தைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்த மகள்களுடன் செல்ஃபி எடுத்து அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில் ஒரு தந்தை தனது செல்ல மகளை இழந்துவிட்டு நிற்கிறார்.


Click it and Unblock the Notifications
