கடனை அடைக்க முடியல.. பெற்ற சிறுமிகளை அப்பாக்களே ஏலம் விடும் கொடூரம்! ராஜஸ்தானில் நடக்கும் கொடுமை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமீப நாட்களாக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து கண்காணித்து வந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், அம்மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அம்மாநிலத்தில் கடன் அடைக்க முடியாததால் சிறுமிகள் ஏலம் மூலம் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏலம்
இந்தியாவில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களில் ஏறத்தாழ 6 மாவட்டங்களில் ஒரு மோசமான பழக்கம் பின்பற்றப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வாங்கும் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையெனில் அவர்களது மகள்கள் கட்டப்பஞ்சாயத்து மூலமாக ஏலம் விடப்படுவது வழக்கம்.

பலாத்காரம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு ஏலம் விடப்படும் பெண்கள் 8-18 வயதிற்கு உட்பட்டவராக இருக்கின்றனர். ஒருவேளை ஏலம் விட மறுக்கப்பட்டால் அப்பெண்மணியின் தாயார் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார் என்பதுதான் இதில் உட்சபட்ச கொடுமை. இப்படி ஏலம் போகும் பெண்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி மற்றும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுவார்கள். கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தி விட்டு தனது மகளை அழைத்து செல்லலாம்.

கடன்
இந்த நடைமுறையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரூ.15 லட்சம் கடன் பெற்ற ஒருவரது மகளை ஏலம் விட வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இறுதியில் அவர் தனது மகளை ரூ.8 லட்சத்திற்கு விற்றுள்ளார். மற்றொரு சம்பவத்தில் தனது மனைவியின் சிகிச்சைக்காக ரூ.6 லட்சம் கடன் வாங்கிய நபரால் அக்கடனை அடைக்க முடியவில்லை. மட்டுமல்லாது அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

மனித உரிமைகள் ஆணையம்
இதனால் தனது மகளை அவர் ஏலத்தில் விற்றுள்ளார். அவரது மகள் ஆக்ராவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். தற்போதுவரை அந்த இளம்பெண் 4 முறை கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் (அக்.26) செய்திகள் வெளியான நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக ஊடக அறிக்கையை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அந்த விவரங்களும், நடவடிக்கை எடுக்க ஏதேனும் முடிவெடுத்திருந்தால் அது குறித்தான தகவல்களையும் பகிர வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
அதேபோல மனித உரிமை மீறல் மற்றும் பெண்கள் கண்ணியத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் சாதி அடிப்படையிலான பஞ்சாயத்து அமைப்பை ஒழிக்க மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பதும் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை என்னென்ன என்பது குறித்து ராஜஸ்தானின் காவல்துறை தலைமை இயக்குநரும் பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கைது
காவல்துறை தலைமை இயக்குநர் தாக்கல் செய்யும் பதிலில் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? கைதானவர் எத்தனைபேர், மனிதர்களை விற்கும் குற்றத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறுமிகளை ஏலம் விடும் நடைமுறைக்கு எதிராக பத்திரிகை செய்தியை அடிப்படையாக கொண்டு மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications