புற்று நோய் பாதித்த சிறுவனை விமானத்தில் பறக்க வைத்து ஆசையை நிறைவேற்றிய விமானப்படை
அம்பாலா: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, 14 வயது சிறுவனை போர் விமானத்தில் பறக்க வைத்து அவனது ஆசையை பூர்த்தி செய்தனர். சிறுவனுக்கு மிகச்சிறந்த கவுரவத்தையும் அளித்தனர்.
பீகாரைச் சேர்ந்த சந்தன், 14, என்ற ஏழைச் சிறுவன், நான்கு ஆண்டுகளுக்கு முன், டெல்லி நகர மருத்துவமனையின் வெளியே, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தான். அவனை கண்ட, செய்தியாளர் ஒருவர், செய்தி வெளியிட்டு, அந்த ஏழை சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக, 12 லட்சம் ரூபாய் சேகரித்து கொடுத்தார். எனினும், கொடிய புற்றுநோயை அந்த சிறுவனால் வெல்ல முடியவில்லை; நோய் தீவிரமாக பரவி, எந்த நேரமும் இறக்கலாம் என்ற நிலையில் உள்ளான்.

இதை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று, போர் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற சந்தனின் ஆசையை, நேற்று நிறைவேற்றியது. அரியானா மாநிலம் அம்பாலா நகரில் உள்ள, விமான படை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட சிறுவன் சந்தனுக்கு, போர் விமானங்களை இயக்கும் விமானி போல சீருடை அணிவிக்கப்பட்டது. மாதிரி விமானம் ஒன்றில் சிறிது நேரம் பயிற்சி பெற்ற பின், போர் விமானத்தில் அந்தச் சிறுவன் ஏற்றி செல்லப்பட்டான்.

'போர் விமானத்தை இயக்குவது ஒன்றும் பெரிய சாதனையல்ல; புற்றுநோயை எதிர்த்து வாழ்வது தான் பெரிது; அந்தச் சாதனையை நிகழ்த்தி வரும் இந்தச் சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி' என்றனர்.
இதனிடையே சிறுவன் சந்தன் இந்திய விமானப்படை தளபதி அரூப் ராகாவை வியாழக்கிழமையன்று தனது தந்தை கிரீஸ் மண்டலுடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றான். அப்போது அவன் விமானப்படை அதிகாரிகள் அணியும் சீருடை அணிந்திருந்தான்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் புற்றுநோய் பாதித்த சிறுவன் ஒருநாள் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தான். அதேபோல சிறுவன் சந்தனின் ஆசையை விமானப்படை அதிகாரிகள் பூர்த்தி செய்து கவுரவம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications