ஆர்.கே.நகரில் தேமுதிக களம் இறங்கினால் நாங்கள் ஆதரிப்போம்.. தமிழிசை தகவல்!
டெல்லி: ஆர்.கே. நகர் தொகுதியில் தேமுதிக தனது வேட்பாளரை நிறுத்தினால் அந்த வேட்பாளரை, எங்களது கூட்டணி வேட்பாளராக கருதி ஆதரவு தெரிவிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். எங்கள் அகில இந்திய தலைவர் அமித் ஷாவுடனும் இது குறித்து தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்தோம். அப்போது தமிழக அரசியல் நிலைமையை அவரிடம் விவரித்தேன். தே.மு.தி.க.வினர் தங்கள் வேட்பாளரை களமிறக்கினாலும் அவர் எங்கள் கூட்டணி வேட்பாளராகத்தான் இருப்பார். பா.ஜனதா அந்த வேட்பாளரை ஆதரிக்கும்.
சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு மாணவர் அமைப்பு தடை செய்யப்படுவது அந்த ஐ.ஐ.டி.யின் முதல்வர் எடுக்கக்கூடிய நிர்வாகம் சார்ந்த முடிவு. மாணவர்களிடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் அது தோன்றுகிறது.
இதை அரசியலாக்கக் கூடாது. ஆனால் அத்தனை அரசியல் கட்சிகளும் அந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் போராட்டத்தை நடத்தி அரசியல் செய்கிறார்கள். ஐ.ஐ.டி.யில் படிப்பு என்பது மிகவும் கடினமான படிப்பு. அதில் எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் என்று நான் அந்தக் கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications