கனவிலும் இப்படி நடக்க கூடாது.. குதிரையில் திருமண ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி.. பெரும் சோகம்
போபால்: விரும்பிய பெண்ணை இன்னும் சில மணிநேரங்களில் கரம்பிடிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து ஊர்வலம் வந்த இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளையின் உயிர் பிரிந்ததால் திருமணத்துக்கு வந்தவர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.
திருமணம்.. ஆண், பெண் யாராக இருந்தாலும் வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்வு. இதனால் தான் இப்போது திருமணங்களை பலரும் அதிக நிதி செலவில் பிரமாண்டமாக செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்போ தங்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப சொந்த பந்தங்களை அழைத்து தங்களின் குடும்ப முறைப்படி திருமணங்களை செய்கின்றனர்.

இப்படி குடும்ப பாரம்பரியத்தின் முறைப்படி சென்று தனது மனம் கவர்ந்த பெண்ணை கரம் பிடிக்க சென்ற மணமகன் திடீரென்று இறந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
மத்திய பிரதேச மாநிலம் செபூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ஜாட். இவருக்கு வயது 27. இவரது குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இவரது உறவினர் யோகேஷ் ஜாட் காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச மாநில செயலாளராக இருந்து வருகிறார். அதேபோல் பிரதீப் ஜாட் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினான என்எஸ்யூஐயின் செபூர் மாவட்ட முன்னாள் தலைவர் ஆவார்.
இந்நிலையில் தான் பிரதீப் ஜாட்டுக்கும், அரசு பள்ளி ஆசிரியைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் செபூர் டவுனில் உள்ள ஜாட் விடுதியில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதீப் குடும்பத்தின் வழக்கப்படி திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை குதிரை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்வார்கள்.
அதன்படி மேளதாளங்களுடன் திருமண ஊர்வலம் புறப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியையை கரம்பிடிக்க பிரதீப் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென்று அவர் குதிரையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். அருகே சென்றவர்கள் பிரதீப்பை பிடித்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் பிரதீப் கண்விழிக்கவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்கள் பிரதீப்பை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் குதிரை ஊர்வலத்தின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை கேட்டவுடன் பிரதீப்பின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதோடு திருமண வீடு சோக வீடானது. இதற்கிடையே தற்போது பிரதீப் குதிரையில் இருந்து சரிந்து விழும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அவரது மறைவுக்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications