ராஜஸ்தானில் ஆண்களை மிஞ்சிய பெண் வாக்காளர்கள்! ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 199 தொகுதிகளுக்கு கடந்த 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பாஜக எப்படியாவது இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல காங்கிரசும், ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி செய்திருக்கிறது. எனவே தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இம்மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 74.71 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த முறை 75.45 சதவிகிதமாக வாக்குப்பதிவு உயர்ந்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் 51,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்துவிட்டதால் அந்த தொகுதியை மட்டும் விட்டுவிட்டு, 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் 74.53 சதவிகிதமாகவும், பெண்கள், 74.72 சதவிகிதமாகவும் வாக்களித்தனர். கடந்த 2018ல் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் வாக்களித்திருந்தனர். இந்தமுறை தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் குஷல்கர் தொகுதியில்தான் அதிக வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
குஷல்கரில் 88.13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல பொக்ரானில் 87.79 சதவிகிதமும், திஜாரவில் 86.11 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக என்று பார்த்தால் அஹோர் தொகுதியில் 61.24 சதவிகிதமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 61.53 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 5.25 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்த அளவில் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே கட்சி இரண்டு முறை ஆட்சி அமைத்ததாக சரித்திரம் கிடையாது. எனவே இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸின் சமூக நீதி திட்டம் விரிவாக மக்கள் மத்தியில் பேசப்படுவதால் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்றும் சொல்லப்படுகிறது. கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ்தான் வெற்றிப்பெறும் என்று தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications