வெறும் 10 காலிப்பணியிடங்களுக்காக குவிந்த 1800 இளைஞர்கள்! குஜராத்தில் உச்சத்தில் வேலையில்லா திண்டாட்டம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 10 காலிப்பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் வேலையின்மை பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசோ, குஜராத் மாடலை பாருங்கள், உத்தரப் பிரதேச மாடலை பாருங்கள் என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இப்படி இருக்கையில், குஜராத்தில் வெறும் 10 காலிப்பணியிடங்களுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்திருக்கின்றனர்.

குஜராத்தின் பாரூச்சில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், வேலைக்கு வர விருப்பம் உள்ளவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சுமார் 1800 இளைஞர்கள் ஹோட்டல் முன்பு குவிந்திருக்கின்றனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், ஹோட்டலின் முன்பு இருந்த தடுப்பு கம்பி உடைந்து விழுந்திருக்கிறது. இதனால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ், பாஜக மீது கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் குஜராத் மாடலை மேற்கோளிட்டு பேசும் பாஜகவுக்கு குஜராத்தின் உண்மை நிலை தெரிய வேண்டும் என்று விமர்சித்துள்ளது. ஆனால் இந்த விமர்சனத்தை பாஜக ஏற்கவில்லை.
பாஜகவின் பாரூச் எம்.பி மன்சுக் வாசவா, "இந்த மாவட்டம் ஒரு மினி இந்தியா. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வேலை தேடி வருகிறார்கள். எனவேதான் இந்த அளவுக்கு கூட்டம் கூடியிருக்கிறது. அதேபோல கூட்டத்தை கட்டுப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஹோட்டல் நிறுவனம் வெறும் 10 காலியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்கள். எனவே திறந்த நேர்காணல் நடத்தாமல், விதிமுறைகளை சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் சொதப்பல்தான் இந்த அளவுக்கு கூட்டம் கூட காரணம். இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் வேலையிண்மையின் விகிதம் 2023ல்ல் 3.2% இல் இருந்து 2024ல் 6% ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தரவுகளின்படி, மே மாதத்தில் 7% ஆக இருந்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 9.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 7.5% மற்றும் 7.7% ஆக இருந்த வேலையின்மை விகிதம் FY24 இல் 8% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications