இதெல்லாம் அநியாயம்.. ஜஸ்ட் 1 விக்கெட் எடுக்க முடியாதா? 4 வருடம் கழித்து நியூசிலாந்து கொடுத்த ஜெர்க்
கான்பூர்: 4 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் எதிரணி டிரா செய்துள்ளது என்றால் அது நியூசிலாந்துதான்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட போட்டித்தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 284 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது இந்தியா.

9 விக்கெட்டுகள்தான்
ஐந்தாவது தினமான இன்று நியூசிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற இலக்கோடு இந்தியா பந்து வீசியது. நேற்று ஆட்டநேர முடிவில் வில் யங் வெறும் 2 ரன்களுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். ஓபனிங் பார்ட்னர்ஷிப் முறிந்துவிட்டதால் இன்றைய தினம் சீக்கிரமாக நியூசிலாந்து சுருட்டி போட்டு இந்திய அணி வெற்றி வாகை சூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தொடக்க வீரர் லதாம், 52 ரன்கள் எடுத்தார். இதற்காக அவர் சந்தித்த பந்துகள் 146. வில் சாமர்வில்லே 110 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்தார். இப்படியாக பேட்ஸ்மேன்கள் அனைவரும் பந்துகளை பயில்வான்கள் போல சாப்பிட்டு கொண்டு காலத்தைக் கடத்தினர் .

பந்தை சாப்பிட்ட நியூசிலாந்து
விக்கெட்டுகளை எடுப்பதற்குள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. 78வது ஓவரின் இரண்டாவது பந்தில், பிளண்ட்வெல் அவுட் ஆனபோது, இன்னமும் 12 ஓவர்கள் இருப்பதால் எஞ்சிய 3 விக்கெட்டுகளை எப்படியும் வீழ்த்தி விடலாம் என்று நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்தது. ஆனால் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகிய நியூசிலாந்து வீரர்கள் (இந்திய வம்சாவளியினர்) கடைசிவரை களத்தில் நின்று கொண்டனர் . கடைசி 2 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்துவிட்டால் இந்திய அணி வெற்றி பெறும் என்று நகம் கடிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் அனாயசமாக பந்துகளை சந்தித்து ரச்சின் மற்றும் அஜாஸ் பட்டேல் ஜோடி டிரா செய்துவிட்டது.

4 வருடங்களுக்கு பிறகு ஒரு டிரா
2017ம் ஆண்டு இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிரா செய்தது. அதன் பிறகு இந்திய மண்ணில் வேறு எந்த அணியும் ட்ரா செய்ய முடியவில்லை. பெரும்பாலும் இந்திய அணி தான் வெற்றி பெறும். ஆனால் நான்கு வருடங்கள் கழித்து நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இவ்வாறு ஒரு சாதனையை செய்துள்ளது. தொடர்ந்து இந்திய மண்ணில் 6 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து தோற்ற நிலையில் அந்த வரிசை தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து, டிரா செய்து அசத்தியுள்ளது.

நியூசிலாந்து தொல்லை
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை வென்றது . சமீபத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா இருந்தபோது நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இவ்வாறு தொடர்ந்து இந்திய அணியின் முன்னேற்றத்திற்கு நியூசிலாந்து முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. அந்த அணியின் திறமை சமீபகாலமாக வளர்ந்து இருப்பதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

அநியாயமா இருக்கு
9 விக்கெட்டுகளை எடுத்து விட்டு ஒரு விக்கெட் எடுக்க முடியாமல் தோற்றது அநியாயமாக இருக்கிறது, தாங்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பிரபல வர்ணனையாளர் ஹர்ஷ போக்லே, கூறுகையில் பேட்டில் பந்து பட்டு கேட்ச்சுக்கு அருகே சென்றது, சில மில்லி மீட்டர் இடைவெளியில் பேட்டில் பந்து படாமல் விலகியதால் அவுட் நடக்காமல் போனது, ஐந்து நாட்கள் கிரிக்கெட் போட்டி முழுமையாக நடைபெற்று இத்தனை சுவாரசியங்கள் அரங்கேறின. பிழைத்து இருப்பது என்பது மிகச் சிறந்த விஷயம். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காதலிப்பதற்கு இதெல்லாம் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் . முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் , டெஸ்ட் கிரிக்கெட் என்று சொல்லி ஹார்டின் படம் போட்டு இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் சுவாரசியம் மிகுந்தது கரெக்ட்தான். இருந்த போதிலும், இந்திய அணி தோற்றதால், ரசிகர்கள் அப்செட்டில் இருப்பது, என்பது தனிக்கதை.












Click it and Unblock the Notifications