டாக்கா தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண் உடல் நாளை டெல்லி வருகிறது- சுஷ்மா
டெல்லி: டாக்காவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் நேற்று புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், 20 பிணைக்கைதிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். தீவிரவாதிகளில் 6 பேர் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார். பிணைக்கைதிகளில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் தருஷி ஜெயினும் ஒருவர். இவர் டாக்காவில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இவரது தந்தை சுமார் 20 ஆண்டுகளாக வங்காளதேசத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். விடுமுறைக்காக வங்காளதேசத்துக்கு வந்திருந்த தருஷி, தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி படுத்தினார்.
The mortal remains will reach Delhi by Jet Airways on Monday 4th July. This is with concurrence of Tarishi's father. /3 @15saloni2626
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 2, 2016
இந்நிலையில், வங்காளதேசத்தில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட சில நடைமுறைகள் முடிந்தபின்னர், நாளை தருஷியின் உடல் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், தருஷியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.
இந்தத் தகவல்களை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications