Gen Zஐ தொடர்ந்து போராட்டத்தில் குதித்த Gen Alpha மாணவர்கள்.. 24 மணி நேரத்தில் பணிந்த நிர்வாகம்!
லக்னோ: நீட் முறைகேடுகளுக்கு எதிராக Gen Z மாணவர்களின் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற நாடு தழுவிய மாணவர் போராட்டம் மத்திய அரசை பின்வாங்க வைத்தது. இதற்கிடையே இப்போது Gen Zவை போலவே Gen Alpha மாணவர்களும் தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தில் குதித்துள்ளனர். உத்தர பிரதேச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டம், மாவட்ட நிர்வாகத்தையே உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
டெல்லியில் Gen Z மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் நாடு முழுக்க எதிரொலித்தது அனைவருக்கும் தெரியும், இந்த போராட்டம் மத்திய அரசையே கூட பின்வாங்க வைத்தது. இதற்கிடையே இப்போது Gen Zஐ போலவே Gen Alpha மாணவர்களும் தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தில் குதித்துள்ளனர். Gen Alpha என்பது 2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகள் ஆவர். மாணவர்கள் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

என்ன நடந்தது
பதேபூர் மாவட்டத்தின் கிஷன்பூர் பகுதியில் உள்ள சர்வோதயா இன்டர் கல்லூரி வளாகத்தில் தான் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அங்கிருந்த மாணவர்கள் ஒன்று கூடி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பள்ளியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதே மாணவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
தடையற்ற மின்சாரம், ஒவ்வொரு வகுப்பறையிலும் 4 மின்விசிறிகள், பழுதடைந்த மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும், மேசை & சேர்கள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மேலும், மதிய உணவு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், சுத்தமான கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் ஆகியவற்றை கோரிக்கையாக வைத்து போராட்டத்தில் குதித்தனர்.
Gen Alpha taking control!
— Piyush Rai (@Benarasiyaa) July 28, 2026
In UP's Fatehpur, students with banners and placards protest outside the school main gate demanding better amenities inside the premises. pic.twitter.com/WjPGQ80mlx
மிரட்டல்?
முதலில் இந்த பிரச்சனைகளை எழுப்பிய மாணவர்களை பள்ளி முதல்வர் மிரட்டியிருக்கிறார். அதாவது இதுபோல போராட்டம் நடத்தினால் தேர்வில் தோல்வி பெயில் ஆக்கிவிடுவேன் என பள்ளி முதல்வர் மிரட்டியதாக சில மாணவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், "மின்சாரமும், விசிறிகளும் இல்லாததால் வகுப்பறையில் உட்கார முடியவில்லை. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை தான் நாங்கள் கேட்டோம். பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்றார்.
24 மணி நேரத்தில் நடவடிக்கை
இந்த போராட்டத்தின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரத்தில் அனைத்து வகுப்பறைகளிலும் மின்விசிறிகள் பொருத்தப்படும், மின் இணைப்புகள் சரி செய்யப்படும், குடிநீர் வசதி மேம்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மேலும், ஒரு மாதத்திற்குள் மேசை, நாற்காலிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. அதன் பிறகே மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
யூனிபார்ம்
இதற்கிடையே போராட்டத்துக்கு வேறொரு காரணமும் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அதாவது பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு கடையில் மட்டுமே யூனிபார்ம் வாங்க வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே யூனிபார்ம் வைத்திருக்கும் மாணவர்களிடமும் கூட புதிய யூனிபார்ம் வாங்குமாறு கூறியதால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம், "விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் யூனிபார்மை எந்த கடையில் வேண்டுமானாலும் வாங்கலாம். குறிப்பிட்ட கடையில் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்று கூறியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்வேகம்
சமீபத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் Gen Z மாணவர்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டம் மத்திய அரசை தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஏற்க வைத்தது. அந்த வெற்றி தான் பள்ளி மாணவர்களிடமும் தங்களது உரிமைகளை அமைதியான முறையில் கேட்டு பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
