என் சீட்டைக் குறி வைக்கிறாரா மோடி.. பாஜகவிடம் விளக்கம் கேட்கும் முரளி மனோகர் ஜோஷி
டெல்லி: தான் போட்டியிட முடிவு செய்துள்ள வாரணாசி தொகுதியில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறித்து பாஜக தலைமை விளக்கம் தர வேண்டும் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் பாஜகவுக்குள் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜோஷி மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜும் வேறு ஒரு பிரச்சினை தொடர்பாக பாஜக தலைமையுடன் மோத ஆரம்பித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பாஜகவுக்குள், உட்கட்சி மோதல் வெடித்துள்ளதால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த பாஜக தலைவர்கள் கூட்டத்தில்தான் இந்த மோதல் வெடித்ததாம்.

என்னோட வாரணாசி மோடிக்கா...
முரளி மனோகர் ஜோஷி தான் போட்டியிட்டு வரும் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியி ஆர்வமாக உள்ளார். ஆனால் அங்கு மோடி போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கோபமடைந்துள்ளார்.

விளக்கம் தருக
இதையடுத்து மோடி, வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளாரா. எனக்கு சீட் கிடையாதா. இதை பாஜக தலைமை விளக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதியூரப்பா எதிர்ப்பாளர்களை இணைக்க சுஷ்மா எதிர்ப்பு
மறுபக்கம் சுஷ்மா சுவராஜ் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். அதாவது எதியூரப்பா எதிர்ப்பாளரான பி.ஸ்ரீராமுலு தொடங்கி நடத்தி வரும் பிஎஸ் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கர்நாடகத்தில் பாஜக கூட்டணி அமைக்கவும் கூடாது, அக்கட்சியை பாஜகவுடன் இணைக்கவும் கூடாது என்று சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ராஜ்நாத் சிங் முகத்துக்கு நேராக
கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோஷி, வாரணாசி தொகுதி குறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடமே நேரடியாக விளக்கம் கோரி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டதாம்.

விளக்கம் தரவில்லை
ஆனால் ராஜ்நாத் சிங் ஜோஷியின் கேள்விக்கு நேரடியாக விளக்கம் தரவில்லையாம். அதேசமயம், ஜோஷி ஜாலியாகத்தான் இதைக் கேட்டார், பிரச்சினை செய்யவில்லை என்று பாஜக தரப்பு சமாளித்துள்ளது.












Click it and Unblock the Notifications