மூச்சுப்பயிற்சியில் முழு மூச்சாய் ஈடுபடும் திருநங்கைகள்.. சர்வதேச யோகா தினத்திற்கு தயார்
மும்பை: ஓரே சீராக மூச்சை இழுத்து விட்டும்... கையை காலை நீட்டியும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச யோகாதினம் நாளை கடைபிடிக்கப்படுவதை ஒட்டியே இவர்கள் சிறப்பு பயிற்சில் ஈடுபட்டனர். இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள், கடற்படை வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் யோகா பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட ஐ.நா அறிவித்துள்ளது. பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகா கலை, நாடு, சமயம், ஆகியவற்றைக் கடந்து, அனைத்துப் பகுதிகளிலும் இன்று பிரபலமாகியுள்ளது.
முதலாம் ஆண்டு என்பதால் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தாலும் நாடுமுழுவதும் யோகா கலையை இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லீம்களும் யோகா கற்றுக்கொள்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

திருநங்கைகள்
மகாராஷ்ரா மாநிலம் நாக்பூரில் திருநங்கைகள் சேவை சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திருநங்கைகள் கலந்துகொண்டு, யோகா பயிற்சி பெற்றனர். உத்தம் பாபா சேனாபதி என்ற திருநங்கை சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார்.

கடற்படை வீரர்கள்
இதேபோன்று, மும்பையில் கடற்படை வீரர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஏராளமான கடற்படை வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.

பள்ளி மாணவர்கள்
சென்னையில் வேலம்மாள் பள்ளி மாணவ-மாணவிகள் 3001 பேர் யோகா பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். லிம்கா புத்தகத்தில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது. யோகா பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மனதும் சாந்தமடைவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

முஸ்லீம் பயிற்சியாளர்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் முஸ்லீம் ஒருவர் யோகா செய்யும் முறையை சக தோழர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். வாரணாசியை ஒட்டியுள்ள ஜெய்பூரில் தாம் கற்ற யோகா கலையை மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கிறார்.
தமிழக பள்ளிகளில்
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், சர்வதேச யோகா தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். நாளைய தினம் தமிழக பள்ளிகளில் சர்வதேச யோகாதினம் கடைபிடிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications