பங்குச் சந்தை புது உச்சம்.. மோடி அரசு மீண்டும் அமையப்போவதற்கு அறிகுறியா?
மும்பை: நடப்பு மக்களவைத் தேர்தலில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் பாசிட்டிவான போக்கு அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தையில், வியாழக்கிழமை கொண்டாட்டம் நிலவியது. சென்செக்ஸ் 75,499 ஆகவும், நிஃப்டி 22,993 புள்ளிகளாகவும் ஆகவும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கணிசமான எண்ணிக்கையிலான இடங்களைப் பெறும் என்ற கணிப்புகளால் உற்சாகமடைந்து, மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த எழுச்சி பிரதிபலிக்கிறது என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

மும்பை பங்குச் சந்தை (BSE) 1,822 பங்குகள் முன்னேறின, 2,010 சரிந்தன, இது ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக ஒரு கலவையான மற்றும் நம்பிக்கையான சந்தை உணர்வைக் குறிக்கிறது என்கிறார்கள் அரசியல் பண்டிதர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில், பங்குச் சந்தைகளில் "வலுவான எழுச்சி" ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். வர்த்தகமும் அதிகரிக்கும் என்றார். இந்த நம்பிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எதிரொலித்தார்.
அமெரிக்க தேர்தல் அரசியல் பார்வையாளரான இயன் ப்ரெம்மர் இதையே எதிரொலித்தார், அவர் பாஜகவுக்கு இந்த தேர்தலில் சுமார் 305 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளார். இந்த கணிப்பைவிட 10 சீட் அதிகம் அல்லது 10 சீட் குறையலாம் என்கிறார் அவர்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முடிவான, 2024 நிதியாண்டில் 2.10 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கத்திற்கு டிவிடெண்டாக தருவது என்பதும், பங்குச் சந்தையில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. இந்தத் தொகை, முந்தைய ஆண்டின் பரிமாற்றத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது இதற்கு காரணம்.
ICRA தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர், இந்த உபரி நிதியானது அரசாங்க செலவினங்களை அதிகரிக்க உதவும் என்று கணிக்கிறார். அரசு தனது செலவை அதிகரித்தால் அது நாட்டில் பணப்புழக்கத்திற்கு வழிவகுக்கும்.
வியாழக்கிழமை பங்குச் சந்தை வங்கி மற்றும் வாகன பங்குகளின் ஏற்றத்தால் மீட்சியை கண்டது. நிஃப்டியின் வாகன பங்குகளின் குறியீடு 2.25% மற்றும் வங்கி பங்குகளின் குறியீடு சுமார் 2.06% அதிகரித்திருந்தது. மாறாக, மருந்து துறை சரிவைக் கண்டது. ஒரு நிலையான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு மற்றும் வலுவான பொருளாதாரக் கொள்கைகள் சந்தையில் சாதகமான போக்கை உருவாக்குகின்றன என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications