ட்விஸ்ட்! மீண்டும் காங். பக்கம் வரும் சிறுபான்மையினர்! மே.வங்க இடைத்தேர்தல்! திரிணாமுலுக்கு பெரிய அடி
மே. வங்க இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க இடைத்தேர்தலில் 15 ஆண்டுகளாக திரிணாமுல் வசம் இருந்த முக்கிய தொகுதி இப்போது காங்கிரஸ் பக்கம் சென்றுள்ளது. இது சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்வதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இன்று மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதேபோல நாகாலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் மேகாலயாவில் இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைப்பதாகத் தெரியவில்லை. அங்குத் தொங்கு சட்டசபையே உருவாகியுள்ளது.

இடைத்தேர்தல்
இந்த மூன்று மாநிலச் சட்டசபைத் தேர்தலைத் தவிரப் பல மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், அதேபோல அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக என மொத்தம் 10 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

வாக்கு எண்ணிக்கை
தற்போது வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சாகர்டிகி தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் சுமார் 34929 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதேநேரம் அங்குக் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் திரிணாமுல் கட்சியை விட சுமார் 11 ஆயிரம் வாக்குகள் அதிகமாக 45871 வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். இதில் பாஜக சார்பில் களமிறங்கிய திலீப் சாஹா வெறும் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். மற்ற எந்தவொரு வேட்பாளரும் இதுவரை பெரியளவில் வாக்குகளைப் பெறவில்லை.

பின்னடைவு
மேற்கு வங்கத்தில் இப்போது திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. எனவே, அங்கு எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக இருந்தார்கள். இதன் காரணமாகவே அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் தூரத்து உறவினர் தேபாஷிஸ் பானர்ஜி இந்தத் தேர்தலில் களமிறங்கப்பட்டார். அதேபோல அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவும் திலீப் சாஹாவை பாஜக வேட்பாளராக நிறுத்தியது. இருப்பினும், இரு தரப்பிற்கும் பெரியளவில் வாக்குகள் கிடைக்கவில்லை.

காங்கிரஸ்
மாறாகக் காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாசுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளது. இடதுசாரிகளின் ஆதரவுடன் களமிறங்கிய அவருக்கு இதுவரை அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாருமே வெல்லவில்லை. இந்தச் சூழலில் இப்போது பைரன் பிஸ்வாஸ் வெல்லும்பட்சத்தில் மேற்கு வங்க சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் இருக்கும் ஒரே எம்எல்ஏவாக பைரன் பிஸ்வாஸ் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினர்
இந்த இடைத்தேர்தலுக்காக அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் அவரது உறவினரும் நம்பிக்குரிய தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் என இருவரும் நேரடியாக சாகர்டிகி தொகுதியில் பிரசாரம் செய்தனர். இருப்பினும், அவர்களால் அங்கு வெல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸ்-சிபிஎம் கூட்டணிக்குச் சென்றுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட தொகுதியில் சுமார் 63% சிறுபான்மை வாக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ்
இதே தொகுதியில் 2021 சட்டசபைத் தேர்தலில், இத்தொகுதியில் களமிறங்கிய சுப்ரதா சாஹா மூன்றாவது முறையாக வெற்றி பெற்றவர், மேலும் அவர் மாநில அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு முதலே அவர் தான் இங்கு எம்எல்ஏவாக இருந்து வந்தார். கடந்த டிச. மாதம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications