ராக்கெட்டை அனுப்பும் முன் திருப்பதியில் பூஜை செய்வது மூடநம்பிக்கை- சி.என்.ஆர். ராவ் அடுத்த அதிரடி!!
பெங்களூர்: இஸ்ரோ சார்பில் ராக்கெட்டுகளை அனுப்புவதற்கு முன் திருப்பதியில் பூஜை செய்வது ஒரு மூடநம்பிக்கை என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி சி.என். ஆர்.ராவ் சாடியுள்ளார்.
கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர் மற்றும் விஞ்ஞானி சி.என். ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞானி சி.என். ஆர். ராவ், அறிவியல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று சாடினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்புவதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன? என்றார்.

அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், அது மூடநம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றிபெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை.
மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அறிவியல் துறையில் முதலீடு செய்வதை தவிர இந்தியாவிற்கு வேறு வழி இல்லை. அறிவியல் துறையில் பின்தங்கிக்கொண்டு இந்தியா வல்லரசாக இருக்க வாய்ப்பில்லை என்றார்.












Click it and Unblock the Notifications