மோடி அரசு 20ம் தேதி பதவியேற்க திட்டம்: 20 அமைச்சர்கள்... ஜெட்லிக்கு நிதி, சுஷ்மாவுக்கு பாதுகாப்பு?
டெல்லி: மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு அமைந்தால் நிதியமைச்சராக ஜெட்லியும், பாதுகாப்புத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜும் அமர்த்தப் படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அப்புதிய அமைச்சரவையில் அத்வானி சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் எனச் சொல்லப் படுகிறது.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட உள்ளன. ஆனால், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணிப்புகள் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன.
இதனால், வெற்றி அதிகாரப்பூர்வமான அறிவிக்கப் படாததற்கு முன்னதாகவே மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக முன்னேற்பாட்டு வேலைகளில் பாஜக இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. வெற்றியைக் கொண்டாட இனிப்புகள் கூட வாங்கப் பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று மாலை காந்தி நகரில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடி ஆலோசனை நடத்துகிறார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கலாம் என முடிவெடுக்கப் படும் எனத் தெரிகிறது.

20 அமைச்சர்கள் மட்டும்...
பா.ஜ.க ஆட்சியில் மோடி தலைமையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக...
தற்போதைய காங்கிரஸ் அரசில் 28 கேபினட் அமைச்சர்கள், 43 இணையமைச்சர்கள் என மிகப்பெரிய அமைச்சரவை இருந்தது. அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் மந்திரிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. ஆனால் அதுவே முறைகேடுகளுக்கு வழிவகுத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டதாக பாஜக கருதுவதால் குறைந்த அளவு அமைச்சர்களே நியமிக்கப் படுவார்கள் எனத் தெரிகிறது.

முக்கிய இலாகாக்கள்...
மோடியின் அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ், ராஜ் நாத்சிங், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், அமித்ஷா உள்ளிட்டோருக்கு மட்டுமே முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுஷ்மாவுக்கு பாதுகாப்பு...
தற்போதைய லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக சிறந்த முறையில் செயல்பட்ட சுஷ்மா சுவராஜூக்கு பாதுகாப்புத் துறை போன்ற முக்கியமான இலாகா கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

வெளியுறவுத் துறை மீது கண்...
அதே நேரத்தில் 4 முக்கிய இலாகாக்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு சுஷ்மாவுக்கு வாய்ப்பு வழங்கப் பட உள்ளதாகவும், ஆனால் அவர் வெளியுறவுத் துறையை விரும்புவதாக கூறப்படுகிறது. அப்படி, சுஷ்மா பாதுகாப்பு துறையை தேர்ந்தெடுக்காத பட்சத்தில் அப்பதவி நிதின் கட்காரி வசம் வழங்கப் படலாம்.

நிதியமைச்சராக அருண் ஜெட்லி...
பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும், முன்னணி வழக்கறிஞருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்ட இலாகாவும், அருண் ஜெட்லிக்கு நிதித்துறையும் ஒதுக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவுக்கும் பதவி...
அதேபோல், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க பொறுப்பாளராக இருந்து சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றிய, மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித்ஷா பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கு...
பா.ஜ.க கூட்டணியில் இணைந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு ரயில்வே அமைச்சர் பதவி வழங்கப்படலாம். மேலும் கூட்டணி கட்சியான அகாலி தளம் சிவசேனா கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க பா.ஜ.க ஆலோசித்து வருகிறது.

2வது திட்டம்...
அதேசமயம் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டால், நிதின் கட்காரிக்கு ரயில்வே துறையும், ராம் விலாஸ் பஸ்வானுக்கு மக்கள் நல்வாழ்வு அல்லது விவசாயத் துறை ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது.

அத்வானியின் பங்கு...
பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கட்சி விவகாரங்களை கவனிப்பார் என்றும் அவர் அமைச்சரவையில் சேர்க்கபட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. எல்.கே.அத்வானியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக்க மோடி விரும்புகிறார். ஆனால், அவர் சபாநாயகராக்க விரும்புகிறார். இதனால் அவருக்கு லோக்சபா கட்சி தலைவர், சபாநாயகர் அல்லது தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஆகிய பதவிகளில் ஏதாவது ஒன்று ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

20ம் தேதி பதவியேற்பு...
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என ஆணித்தரமாக நம்பும் பாஜக வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications