தீவிரவாத அமைப்புடன் தொடர்பு! 5 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்! ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் அதிரடி!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி போலீஸ்காரர்கள், ஆசிரியர் உள்பட 5 பேரை பணி நீக்கம் செய்து லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்கா அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் , லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தை அதன் லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்கா நிர்வகித்து வருகிறார். பாஜகவின் மூத்த தலைவரான இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

தனிக்குழு
இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், ஆதரவு தெரிவிப்போரின் அரசு பதவிகளை பறித்து வரும் அதிரடி நடவடிக்கையில் மனோஜ் சின்கா கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் சாசனத்தின் 311 (2) சி பிரிவின் கீழ் பயங்கரவாத தொடர்புகள் கொண்டவர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தனிக்குழு அமைத்துள்ளார்.

விதி என்ன
இந்த தனிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசன பிரிவு 311 (2)ன்படி சம்பந்தப்பட்ட நபரின் மீதான நடவடிக்கைக்கு உரிய காரணத்தை கூறினால் மட்டுமே அரசு ஊழியரின் பணி நீக்கம் அல்லது இடைநீக்கம் அல்லது பதவி குறைக்க முடியும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க முடியாது. இருப்பினும் இந்த விதியின் உட்பிரிவு (சி)ன்படி "ஜனாதிபதி அல்லது கவர்னர் ஆகியோர் மாநிலத்தின் பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை எடுக்கலாம். அவர்களின் நடவடிக்கைக்கு மேற்கண்ட ஷரத்து பொருந்தாது' என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தான் மனோஜ் சின்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

5 பேர் பணி நீக்கம்
இந்நிலையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய 5 பேர் இன்று அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஜம்மு காஷ்மீர் போலீஸ்காரர் தவ்சீப் அகமது மிர், பரமுல்லா போலீஸ் கான்ஸ்டபிள் ஷாகீத் உசேன் ராதார், ஸ்ரீநகர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குலாம் ஹாசன் பராரி, அவந்திபோராவை சேர்ந்த ஆசிரியர் அர்சித் அகமது தாஸ், குப்வாரா சுகாதரத்துறையில் பணியாற்றிய சாராபத் அலிகான் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னராக சின்ஹா 2020 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட்டு வருகிறார். இவர் பதவியேற்ற பிறகு இதுவரை 20க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் பதவிகளை மனோஜ் சின்கா பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications