காஷ்மீர்: பெரும்பான்மை கிடைத்தாலும் மாநில அந்தஸ்து தரும் வரை ஆட்சி அமைக்காதீங்க-ரஷீத் எம்பி 'ஷாக்'
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் வரை எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க கூடாது என்கிற பகீர் யோசனையை பொறியாளர் ரஷீத் எம்பி முன்வைத்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணி உட்பட அத்தனை ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து தருவதற்காக மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி தருவதற்கு இதுதான் சரியான முடிவாக இருக்கும் என்கிறார் ரஷீத் எம்பி.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து இழந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது.. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பாஜகவும் வாக்குறுதி அளித்தது.
இந்த நிலையில் அவாமி இதிஹாத் கட்சியின் தலைவரான பொறியாளர் ரஷீத் எம்பி திடுக்கிடும் யோசனையை வேண்டுகோளாக முன்வைத்துள்ளார். அதாவது ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி உட்பட எந்த ஒரு அரசியல் கட்சியும் பெரும்பான்மையே பெற்றிருந்தாலும் உடனே ஆட்சி அமைக்கக் கூடாது; ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மத்திய பாஜக அரசு தர வேண்டும்; அப்படி மாநில அந்தஸ்து வழங்கிய பின்னரே புதிய ஆட்சி அமைப்போம் என அத்தனை ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்கிறார் ரஷீத் எம்பி.
ஆனால் ரஷீத் எம்பியின் இந்த யோசனையை தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா நிராகரித்துள்ளார். பாஜகவின் ஊதுகுழலாகவே ரஷீத் எம்பி செயல்பட்டு வருகிறார். எந்த கட்சியும் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியைத்தான் மத்திய பாஜக அரசு அமல்படுத்தும். இதனைத்தான் ரஷீத் எம்பி விரும்புகிறாரா? எனவும் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications