பவானி சிங்கை நீக்க கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!: வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றம்
டெல்லி: ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெ.மேல்முறையீட்டு வழக்கில், அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுகவின் அன்பழகன் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஏப்ரல் 15ம்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதியம், 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய இரு நபர் பெஞ்ச் இந்த தீர்ப்பை இன்று வழங்கியது. முதலில் மத ன் லோகூர் தீர்ப்பை வெளியிட்டார். தனது தீர்ப்பில் "பவானிசிங்கை நீக்கிவிட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். ஆனால், இதற்கு அடுத்தபடியாக தீர்ப்பை வாசித்த நீதிபதி பானுமதி, "பவானிசிங் நியமனத்தில் தவறில்லை" என்று தீர்ப்பு வழங்கினார்.
இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட கருத்தை கூறியதால், கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதாக அறிவித்தார், மதன் லோகூர்.
மதன் லோகூர் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பை கடுமையாக கண்டித்துள்ளார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்..பவானிசிங் ஹைகோர்ட்டில் ஆஜரானதால் வழக்கின் தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்று லோகூர் கூறினார்.
ஆனால், சிறப்பு நீதிமன்றத்தில், பவானிசிங் ஆஜராக கர்நாடக அரசு பிறப்பித்திருந்த உத்தரவை, அதன்பிறகு ரத்து செய்யவில்லை என்பதால், பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்று பானுமதி தீர்ப்பளித்தார். "2013ம் ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு, பவானிசிங்கிற்கு வழங்கிய அனுமதியை, அந்த அரசு ரத்து செய்யும்வரை பவானிசிங்கிற்கு, மேல் கோர்ட்டுகளில் வாதிடவும் அனுமதி உண்டு" என்று பானுமதி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, ஹைகோர்டில் நடைபெறும் ஜெ. மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், வாதாட கர்நாடக அரசு, பவானிசிங்கிற்கு அனுமதி வழங்கவில்லை என்று கர்நாடக மாநில அரசு வக்கீல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications