சொத்து குவிப்பு வழக்கை திசை திருப்ப, குழப்ப அவசரம் அவசரமாக வருமானவரி தாக்கல் செய்த ஜெ.: ஆச்சார்யா
டெல்லி: தம் மீதான சொத்து குவிப்பு வழக்கின் போக்கை திசை திருப்பவும் குழப்பவுமே அவசரம் அவசரமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமான வரித் தாக்கல் செய்தார் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா வாதிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு, திமுக பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா முன்வைத்த வாதங்கள்:
1991-96ஆம் ஆண்டு கால கட்டத்தில் 27 மாதங்கள் 1 ரூபாய்தான் சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா. அப்படி 1 ரூபாய் அவர் சம்பளம் வாங்கியிருக்கும் போது அவரது சொத்து மதிப்பு எப்படி ரூ66 கோடியாக உயர்ந்தது?
நாம் ரூ10 லட்சம் வருமானத்துக்கு வருமான வரித் தாக்கல் செய்யும் போது பேலன்ஸ் சீட் கேட்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதா வருமான வரித் தாக்கல் செய்த போது அப்படி எதுவுமே கேட்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போட்ட பின்னர்தான் அவர் அவசரம் அவசரமாக வருமான வரித் தாக்கல் செய்திருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அனைத்து ஆவணங்களையும் போலியாக ஜெயலலிதா தயாரித்திருக்கிறார்.
அப்படி ஜெயலலிதாவிடம் சொத்துகளுக்கான உரிய ஆவணங்கள் இருந்திருந்தால் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய போதே பதிலளித்திருப்பார். ஆனால் அப்படியான ஆவணங்கள் அவரிடம் அப்போது இல்லை. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கவே போலியான ஆவணங்களை ஜெயலலிதா உருவாக்கியிருக்கிறார்.
ஜெயலலிதா 1991-94-ம் ஆண்டுக்கான தம்முடைய வருமான வரி ரிட்டன்ஸை 1998-ல் தான் தாக்கல் செய்தார். அதேபோல் 1994-96ஆம் ஆண்டுக்குரியதை 1999-ல்தான் தாக்கல் செய்திருக்கிறார். அவர் எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
சொத்து குவிப்பு வழக்கை திசை திருப்பவும் குழப்பவுமே ஜெயலலிதா அவசரம் அவசரமாக இப்படி வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்.
நமது எம்.ஜி.ஆர். நாளேட்டை நடத்தும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனமானது சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ரூ14 கோடி கொடுத்திருக்கிறது. இந்த பணம், நமது எம்ஜிஆர் சந்தாதாரர் டெபாசிட் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது என்கிறது ஜெயலலிதா தரப்பு.
ஆனால் 1992-96ஆம் ஆண்டு காலத்தில் நமது எம்ஜிஆர் நாளேட்டில் 'சந்தாதாரர் டெபாசிட் திட்டம்' குறித்து ஒரு விளம்பரம் கூட வெளியிடப்படவில்லை. அப்படியானால் இந்த பணம் எப்படி வந்தது?
அரசு ஊழியர் நடத்தை விதிகள் சட்டப்படி ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டால் சட்டப்படி தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. ஆகையால் ஜெயலலிதா சட்டப்படி தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு ஆச்சார்யா வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் ஆச்சார்யா தமது வாதத்தைத் தொடர உள்ளார்.












Click it and Unblock the Notifications